மன்னர்கள் சாப்பிட்ட ராஜமுடி அரிசி..! அடேங்கப்பா சத்துக்கள்

பாரம்பரிய அரிசி வகைகளில் சிறந்த அரிசி ராஜமுடி அரிசி, சிவப்பு, வெள்ளை வெளிர் மஞ்சள் என மூன்று நிறங்களில் விளையும் அரிசி ரகம் இது.


பெயரிலேயே கம்பீரமாக இருப்பதோடு மன்னர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பாரம்பரிய அரிசி. ஆறு அடி உயரம் வளரக்கூடியது ராஜமுடி. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. தவிர வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நோயில் இருப்பவர்களையும் விரைவிலேயே குணமாக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்ளிட்ட டிபன் வகைகளையும், புளி சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட கலந்த சாத வகைகளையும் ராஜமுடி அரிசியில் செய்யலாம். ஒரு கப் ராஜமுடி அரிசி, அரை கப் சிறுபருப்பு இரண்டையும் நன்றாக ஊறவைத்து கழுவவும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். அத்துடன் அரைத்த தேங்காய் பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து பானகமாகப் பருகலாம்.

முந்திரி, பாதாம், வேர்க்கடலை மூன்றையும் கால் கப் எடுத்து கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பசுநெய், நாட்டு சர்க்கரை தலா முக்கால் கப் எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் ராஜமுடி அரிசியை நன்றாக சுத்தம் செய்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அதை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து லேசாக சூடு இருக்கும்போதே பொடித்த முந்திரி, பாதாம் வேர்க்கடலை பொடி மற்றும் நாட்டு சர்க்கரை கலவையை சேர்க்கவும். பின்னர் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால் சுவையான லட்டு ரெடி. இது சத்துள்ளதும் கூட.