அப்துல்கலாமை தெய்வமாக்கிட்டாங்க... கோபுரத்தில் கலாம் சிலைக்கு கிரிக்கெட் வீரர் பலே பாராட்டு

ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் 2002ம் ஆண்டு 2007-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.  நாட்டில் எத்தனையோ குடியரசுத் தலைவர் வந்தாலும் அப்துல் கலாமுக்கு என்று தனிப்பெருமை உண்டு. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் நாட்டின் மிகப் பெரிய பதவியை வகித்த இவர், அனைவராலும் கடவுளிற்கு நிகராக போற்றப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.

குழந்தைகள் மீது தனிப் பிரியம் கொண்டவர். குழந்தைகளும் அவர் மீது அதிக அன்பு வைத்திருந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் இறந்த போது முழு உலகமே கவலையில் ஆழ்ந்தது. இப்போதும் அப்துல் கலாமின் அறிவுறுத்தல்களை பின்பற்றும் ஏராளமான இளைஞர்கள் எம்மில் உள்ளனர் என்றே கூறலாம்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலின் கோபுர மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

அத்தோடு, பொதுவாக கோயில்களில் தெய்வங்களுக்கு தான் சிலைகள் செதுக்கப்படும். ஆனால் அப்துல் கலாமை தெய்வமாக நினைத்து தற்போது கோயிலில் சிலை செதுக்கியுள்ளனர். இதன்மூலம் அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவுக்கடந்த அன்பு வெளிப்படுகிறது என்றார் முகமது கைப்.

கோபுர உச்சியையும் தாண்டி கலாமின் புகழ் நீண்டுகொண்டே போகும். இன்னும் பல காலம் கடந்தாலும், கல்லாக, சிலையாக, ஓவியமாக, புத்தகமாக, கலாம் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.