இந்தியாவில் நதிகள் அழியும் நிலையில் உங்கள் முயற்சி அபாரம்! சத்குருவை பாராட்டிய டைட்டானிக் நாயகன்!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிர் அளிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இவ்வியக்கம் மூலம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் 242 கோடி மரங்களை அடுத்த 12 ஆண்டுகளில் நட திட்டமிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு நடப்படும் மரங்கள், மண்ணின் வளத்தை அதிகரிப்பதோடு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் பயனளிக்கும். இதன் மூலம் காவேரியை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு நதியிலும் நீரோட்டம் அதிகரிக்கும். இத்திட்டத்தை களத்தில் செயல்படுத்தவும், இதில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கவும் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றை தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை மேற்கொண்டிருந்தார். 

இந்நிலையில் டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தனது ஆதரவை அவரின் முகநூல் வழியாக தெரிவித்துள்ளார். அவரின் முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்தே போயிருக்கிறது. இந்நேரத்தில் காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்க காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கியிருக்கும் சத்குருவுடன் இணைவோம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இவ்வியக்கத்திற்கு ஏற்கனவே இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளது குறிபிடத்தக்கது. குறிப்பாக முண்ணனி திரை பிரபலங்களான கமலஹாசன், பிரபு, ஷாருக்கான், அக்சைகுமார், அன்பம் கேர், நவாசுதின் சித்திக், கங்கனா ரானாவத், தம்மணா, காஜல் அகர்வால் போன்றோர் தங்களின் ஆதரவை வழங்கி உள்ளனர்.