எல்.ஐ.சி.யை அழிக்க நினைச்சுடாதீங்க… மத்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை.

அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்திய ஒன்றியத்தைச் சிறுக சிறுகக் கூறுபோட்டு விற்க நினைக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவெடுத்திருப்பது நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியில் மாறி மாறி ஆட்சிப் புரியும் காங்கிரசு, பாஜக ஆகிய இரு கட்சிகளும், அரசின் பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் வளங்களையும், பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு விற்பதை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும், பொருளாதாரத் தோல்விகளையும் மறைக்கவும், திசைதிருப்பவும் விமானப்போக்குவரத்து, தொடர்வண்டித்துறை, மின்சாரத்துறை, சுரங்கத்துறை, எரிபொருள், இராணுவத் தளவாடங்கள், விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், அணு ஆற்றல் என நாட்டின் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் பணியினை முடுக்கிவிட்டுள்ளது.

தொடக்கத்தில் நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்பதாகக் கூறிய இந்த அரசுகள் பிறகு, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் தொடங்கி அரசு ஊழியர்களுக்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பெருந்துரோகத்தைப் புரிந்துள்ளன.

ஏற்கனவே, வெற்றிகரமாக இயங்கிவரும் என்.எல்.சியின் 5% பங்குகளைத் தனியாருக்கு விற்க முயன்று கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு அந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம், தனியாருக்குப் போகாமல் தடுத்தது. அந்த வரிசையில் தற்போது அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்க முயலும் மத்திய அரசு குறிப்பிடும் நட்டம் உள்ளிட்ட எவ்விதக் குற்றச்சாட்டும் வைக்கமுடியாத நிலையில், இலாபகரமாகச் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி யின் பங்குகளை அவசர அவசரமாகத் தனியாருக்கு விற்கும் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசுக்கு ஏன் ஏற்பட்டது.? எந்தத் தனியார் முதலாளியின் இலாபத்தேவைக்காக இத்தகைய மக்கள் விரோத முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

எல்.ஐ.சி பங்குகள் தனியார்மயம் என்பது கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வைத்துள்ள உறுதிமிக்க நம்பகத்தன்மையின் மீது தொடுக்கப்படும் கண்மூடித்தனமான தாக்குதல் மட்டுமின்றி, அவர்களின் தொலைநோக்கு திட்டமிடலுடன் கூடிய சேமிப்பான காப்பீட்டுத்தொகையினைக் காவு வாங்கும் கொடியச் செயல் என்பதனை உணர்ந்து, மத்திய அரசு எல்.ஐ.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும், தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எல்.ஐ.சி ஊழியர்கள் முன்னெடுக்கும் அறவழிப் போராட்டம் வெல்ல, நாம் தமிழர் கட்சி சார்பாக முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.