ஆவணி அவிட்டம் என்றால் என்ன? அன்று ஏன் பிராமணர்கள் அல்லாதோர் பூணூல் போடுகிறார்கள் தெரியுமா?

ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். வரும் 15.8.2019 ஆவணி அவிட்டம்.


இதையே எல்லோரும் பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

ஆவணி அவிட்டம் பிராமண சமூகத்தவர் முக்கியமாக கொண்டாடும் தினமாகும். உபகர்மா என்று அழைக்கப்படும் ஆவணி அவிட்டத்தன்று உபநயன பூணூலை மந்திரங்கள் சொல்லி மாற்றிக் கொள்வது வழக்கம். க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கூட இந்த வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

உபநயனம் -  இதில் நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் உபநயனம். உபநயனம் என்றால் துணைக்கண் என்று பொருள்.

கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு.

வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட,  ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.

அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும்.  திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு  பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும். அதன் பிறகு காயத்ரீ ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தைச் சொல்ல வேண்டும். காயத்ரீ மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் வைராக்கியம் போனால் சகலமும்போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்.