ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சம்! 900 சதவீதம் உயர்த்தப்பட்ட கல்லூரி கட்டணம்! அதிர்ச்சியில் மாணவர்கள்!

எம்-டெக் கல்வி கட்டணம் உயர்வு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐஐடி கல்லூரிகளில் எம்-டெக் பயிலும் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2400 பேர் படிப்பை இடையில் நிறுத்திய செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தியானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் 3 பேர் கொண்ட குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அந்தக் குழுவானது தங்களுடைய அறிக்கையில் பல திடுக்கிடும் அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேட் தேர்வின் மூலம் எம்-டெக் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட 12,400 ரூபாயை ரத்து செய்துவிட்டது. ஐஐடி கல்லூரிகளில் பி-டெக் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாயாக உள்ளது.

அதேபோன்று எம்-டெக் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐஐடி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை 5.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கவும் அந்த குழுவானது முடிவெடுத்துள்ளது. பரிசோதனையில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வும், தோல்வியடையும் ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

மேலும் தற்போது எம்டெக் மாணவர்கள் முதல் பருவத்தில் 8,750 ரூபாயும், பிற பருவங்களில் 5,000 ரூபாயும் கல்வி கட்டணமாக செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளுக்குள் இந்த அறிக்கையில் உள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த அறிக்கையானது எம்-டெக் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.