அவர் நீங்கள் நினைப்பது போன்றவர் அல்ல..! யுவன் சங்கர் ராஜாவின் 3வது மனைவி வெளியிட்ட சீக்ரெட்ஸ்!

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா அதிகம் பேச மாட்டார் என்று பலர் நினைப்பது பொய் என்று அவரது மனைவி ஸாஃப்ருன் கூறியுள்ளார்.


சினிமா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஸாஃப்ருன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே செய்துகொண்ட திருமணத்தால் மனக்கசப்பு அடைந்திருந்த யுவன் ஷங்கர் ராஜா, தற்போதைய திருமணம் சற்று மன அமைதி தருவதாக உள்ளதென்று ஏற்கனவே சில பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.  

அதற்கேற்ப, அவரது புது மனைவி ஸாஃப்ருன் ஊடகம் ஒன்றில் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ''யுவன் ஷங்கர் ராஜா மிகவும் உதவிக்குணம் உள்ளவர். அவருடன் பேசித்தான் நிறைய முடிவுகளை எடுப்பேன். வீட்டில் எனக்காக அவர் நிறைய வேலைகளை செய்துதருவார்.

நள்ளிரவில் பசிக்கிறது என்று கேட்டால் கூட உடனடியாக கடைக்குச் சென்று சாண்ட்விச் போல எதாவது வாங்கி வந்து கொடுப்பார். இப்போது எங்களுக்கு 4 வயதில் ஸியா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறந்தது முதலாக, என்னைவிட அதிகமாக அக்கறை காட்டி யுவன் பராமரிக்கிறார்.

அதேபோல, யுவன் ரொம்ப சாஃப்ட், அதிகம் பேச மாட்டார் என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நல்லா தெரியும். பயங்கரமா டீஸ் பண்ணக்கூடிய ஆள். மிமிக்ரி செய்வார். என்னுடைய கீழக்கரை வட்டார பேச்சு வழக்கை கிண்டல் பண்ணி நிறைய குறும்புத்தனம் செய்வார்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸாஃப்ருன், சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வெளியிட்ட பியார் பிரேமா காதல் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.