ஜெயலலிதா 37 எம்.பி. சீட் ஜெயித்த ரகசியம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 47


அம்மா உணவகம் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்திருக்கிறது என்று மேயர் சைதை துரைசாமியிடம் கூறிய உளவுத்துறை அதிகாரி தொடர்ந்து பேசுகையில், ‘’2016 சட்டமன்றத் தேர்தலில் அம்மா உணவகத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும், கூட்டணி பற்றி கவலைப்பட அவசியம் இல்லை’’ என்று நாங்கள் கொடுத்த அறிக்கையை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

எங்கள் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா எப்படி முழுமையாக நம்பினார் என்றால், எங்கள் அறிக்கையின் அடிபப்டையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற இமாலய வெற்றியை கண்கூடாகப் பார்த்திருந்தார்.

முன் எப்போதும் இல்லாத வகையில் அந்தத் தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளில் நின்று 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்ட மத்திய சென்னையிலும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தோல்வி அடையச் செய்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பணிகுழுவில் நீங்களும் இடம் பெற்றிருந்தீர்கள். நீங்கள் அப்போது ஜெயலலிதாவிடம், ‘அம்மா உணவகம் மக்களிடம் மிகச்சிறந்த அளவில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறை சென்னையை நாம் முழுமையாக கைப்பற்றிவிடுவோம்’ என்று உத்தரவாதம் கொடுத்திருந்தீர்கள். அப்படி வெற்றி பெற்றும் காட்டினீர்கள். இந்த வெற்றி தான் முதல்வருக்கு அம்மா உணவகத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைக் கொண்டு வந்தது. அதனால் தைரியமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று வெற்றி ஈட்டினார்

பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பதையோ, தொலைக்காட்சி அல்லது சினிமா அரங்கில் அரசு கொடுக்கும் சாதனை விளம்பரங்களையோ மக்கள் பெரிதாக மதிப்பதில்லை. அதேநேரம், அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்கள் அதுகுறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அது காற்றைவிட வேகமாகப் பரவுகிறது. அப்படி அம்மா உணவகம் மாபெரும் மெளனப் பிரசாரமாக பங்களிப்பு செய்ததாலே மாபெரும் வெற்றி கிடைத்தது’’ என்றவர், ‘’நாங்கள் அறிக்கை கொடுத்த நேரத்தில், ’சைதை துரைசாமி தான் அ.தி.மு.க. இயக்கம் தோன்றுவதற்கு விதை போட்டவர் என்பது தெரியுமா?’ என்று ஒரு கேள்வி எழுப்பினார் முதல்வர்.

- நாளை பார்க்கலாம்.