உங்கள் குழந்தை இரவில் அழுதுகொண்டே இருக்கிறதா?

சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். இதனால் தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்சினை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநல பிரச்சினைகளும் பிரசவித்த தாய்க்கு ஏற்படக்கூடும்.


பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், இயல்பான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும்.

குழந்தை விழித்திருக்கும்போது பாலூட்டுவது, குளிக்க வைப்பது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது என அம்மாவுக்கு தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால், பகலோ இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு வீட்டுப் பெரியவர்களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி, தொலைக்காட்சி போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போதுதான் புற ஒலிகளுக்கும், புறச்சூழலுக்கும் இணக்கம் ஆவார்கள். கடைகளில் ‘நேப் பெட்‘ என்பது கிடைக்கும். அது கருவறை போன்றதோர் உணர்வை கொடுக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்க வைக்கலாம்.