தொடர் சரிவை சந்திக்கும் எஸ் பேங்க் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?

எஸ் பேங்க். ஜூன் 30. 2019 நிலவரப்படி 303,390 கோடி சொத்து மதிப்புடன், நாடு முழுவதும் 1122 கிளைகள் மற்றும் 1,220 ஏடிஎம்கள் மையங்களை கொண்டு, இந்தியாவின் நான்காவது பெரிய தனியார்த் துறை வங்கி என அழைக்கப்படுகிறது.


ஓராண்டு முன்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கை நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்தது இந்த வங்கி. 2018 ஆண்டு ஜீன் மாதத்தில் 2017-18 நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிடும் முன்பே, ஷார்ட் டெர்ம் எனப்படும் குறுகிய கால முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்து. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 60% லாபத்தை கொடுத்த அட்சய பாத்திரம் என அழைக்கப்பட்டு வந்தது இந்த வங்கியின் பங்குகள். 

ஆனால் கடந்த சில மாதங்களாக, அதன் நிர்வாக குழு மாற்றம் மற்றும் வங்கிகளுக்கான தரக்குறியீட்டு பிரச்சினையில் சிக்கித் தவித்து கொணட்டிருக்கிறது.

2018 ஜீலை 13ம் தேதி, 385 வரை உயர்ந்த இதன் பங்குகளின் விலை, ஐஐஎஃப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றுமின்றி, வராக்கடன் தொகை உயர்வு மற்றும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஏற்பட்ட வருவாய் இழப்பினால், தற்போது 53 ரூபாயாக சரிந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு பேரிடியை தந்துள்ளது. 

இந்நிலையில் வங்கியின் மூலதனத்தை அதிகரிக்க உலகலாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் தனது 10 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக வங்கியின் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குனர் ரன்வீட் கில் தெரிவித்துள்ளார்.

மேலும் எவரெடி இண்டஸ்ட்ரீஸின், பேட்டரி ஃப்ளாஷ் லைட் வர்த்தகத்தை ரூ .1,600- 1,700 கோடிக்கு வாங்க டூயூரோசெல் திட்டமிட்டுள்ளது என்ற அறிக்கையால். கடந்த திங்களன்று எஸ் வங்கியின் பங்குகள் 4.30 சதவீதம் வரை உயர்ந்து. எஸ் வங்கி எவரெடி இண்டஸ்ட்ரீஸின் 9 சதவீத பங்குகளை, அதாவது ரூ. 5 முக மதிப்பில் 68,80,149 பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக வங்கியின் செயல்திறனில் முன்னேற்றம் காணாமல், மிக அபாயகரமான சூழலில் சிக்கியிருந்த வேளையில். வங்கியை மீண்டும் நிலைநிறுத்த அதன் நிர்வாகிகள் முயன்று வருவதை பார்க்க முடிகிறது. 

மேலும் கில் கூறுகையில். வங்கியின் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பெரு மதிப்பை பெற நிறுவன ஊழியர்கள் அனைவரும் அயராது உழைக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

வங்கியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை வைத்தே மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் அதன் வளர்ச்சிப் பாதை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். கடந்த நான்கு மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த இந்த வங்கியின் பங்குகள் கடந்த திங்களன்று ஏறிய நிலையில். 

அது தன் வளர்ச்சிபாதையை தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது மீண்டுமொரு நஷ்ட கணக்கை எழுதிச் செல்லுமா என. மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.

மணியன் கலியமூர்த்தி.