கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றில் இருந்து சிசுவையும் பறித்த பயங்கரம்!

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண் சூனியக் கார மருத்துவன் ஒருவனின் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணிப் பெண்ணை கொன்று வயிற்றில் இருந்த கருவை அறுத்து எடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


குருதாஸ்பூரைச்  சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முதல் கணவன் மூலம் 4 குழந்தைகள் பிறந்த நிலையில் அதன் பிறகு குழந்தைகள் வேண்டாம் எனக் கருதி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துகொண்ட அவர், இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்காததையடுத்து ஒரு மருத்துவர்களை அணுகினர். அப்போது அரைகுறை மருத்துவனும், சூனியக்காரனுமான அந்த நபர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கொன்று அவரது கருவை தனதாக்கிக் கொள்ள யோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

அதன் படி செயல்பட்ட அந்தப் பெண்  தனது வீட்டுக்குப் பக்கதில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை நாடகமாடி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொன்றதாகவும் வயிற்றை கீறி கருவை வெளியில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே கரு இறந்ததையடுத்து தனது வீட்டிலேயே புதைத்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்ணின் உடலை அப்புறப்படுத்துவதற்காக ஒரு பெட்டியில் போட்டு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணை காணவில்லை என அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் கொலைகாரப் பெண்ணின் வீட்டுக்கு வந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரங்கேறிய கொடூரங்கள் அம்பலத்துக்க்கு வந்தன.

இதையடுத்து பெண், பெண்ணுக்கு உடந்தையாக இருந்த கணவன், மாமியார், சூனியக்கார மருத்துவன் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.