மீண்டும் விமானப்படையில் களம் இறங்கினார் அபிநந்தன்! பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனம்!

பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழக வீரர் அபிநந்தன் 12 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீநகரில் உள்ள தமது அணியில் இணைவதற்காக திரும்பியுள்ளார்.


மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார். பாகிஸ்தானால் சிறைப் பிடிக்கப்பட்ட அபிநந்தன் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். ஆனால், இரண்டு நாட்கள் அங்கு பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த அபிநந்தனிடம் நடத்தப்பட்ட சித்ரவதை மற்றும் விசாரணை குறித்து விமானப் படையினர் 2 வாரகாலமாக அபிநந்தனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் விடுமுறையில் செல்ல அபிநந்தனுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடித்து ஸ்ரீநகர் திரும்பிய அபிநந்தன் மீண்டும் பணியில் இணைய உள்ளார்.

4 வார கால விடுப்பில் செல்ல விரும்பிய அபிநந்தன் தமது குடும்பத்தினருடன் சென்னையில் விடுமுறையைக் கழிப்பார் என்று கருதப்பட்ட போதும், அவர் மீண்டும் தமது அணியில் இணைவதற்காக ஸ்ரீநகருக்கே திரும்பியுள்ளார். அங்கு அவர் தனது பணிகளை ஏற்றுக் கொண்டார்.