தமிழிசை சௌந்தராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதால், தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர் இல்லாமல் திண்டாடுகிறது. தமிழகத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், முருகானந்தம் என்று ஏகப்பட்ட பேர் முட்டிமோதி வருகிறார்கள்.
தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகிறாரா ரஜினிகாந்த்.? குருமூர்த்தி கணக்கு பலிக்குமா?
ஆனால், இவர்களில் யாருக்குமே வசீகரம் இல்லை என்பதுதான் மத்திய பா.ஜ.க.வின் எண்ணம். 2021ம் ஆண்டு தமிழகத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு குறிப்பிட்ட அளவு சீட் கிடைக்கவில்லை என்றால், மோடிக்கு மரியாதையாக இருக்காது. அதனால், எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அதனால்தான் ரஜினிகாந்தை எப்படியாவது தங்கள் கட்சிக்குள் இழுத்துவிட துடியாகத் துடிக்கிறது பா.ஜ.க. ரஜினிக்கு மக்களிடம் போதிய அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. மேலும், வரும் தேர்தலில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
தனியாக கட்சி ஆரம்பித்து, அந்தக் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது என்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே அமித்ஷா கருதுகிறாராம். அதனால் எப்படியாவது ரஜினியை இழுத்துவரச் சொல்லி அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.
அதன்படி குருமூர்த்தி நாலைந்து முறை ரஜினியை சந்தித்துப் பேசியும், இப்போது அவசரம் இல்லை என்ற ரீதியில் பதில் கொடுத்திருக்கிறார். அவருக்கு அவசரம் இல்லை என்றாலும், பா.ஜ.க.வுக்கு இப்போது அவசரமும் அவசியமும் இருக்கிறது. அதனால், எப்படியாவது ரஜினியை இழுப்பது அல்லது நிலைப்பாடை தெரிந்துகொள்வது என்ற முடிவுக்கு பா.ஜ.க. வந்திருக்கிறது.
அதனாலே, தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் ரஜினி என்ற செய்தியை பா.ஜ.க.வே இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ரஜினி ஏதாவது பதில் சொல்வார் என்று காத்திருக்கிறது அரசியல் களம். ரஜினி என்ன சொல்லப் போகிறார்.