ஆன்லைன் வகுப்பு வேண்டவே வேண்டாம்... தொலைக்காட்சி போதும்..! வைகோ சொல்றதை கேட்குமா கல்வித் துறை..?

இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதுதான் மாடர்ன் ட்ரென்ட். அதனால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது என்று பலரும் சொல்லிவரும் நிலையில், தனியார் பள்ளிகள் அதனை கைவிடுவதாக இல்லை.


இதனை தடுக்குமாறு வைகோ ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இணைய வழி வகுப்புகள் நடத்துவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூன் 10 ஆம் தேதி நீதியரசர்கள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய - மாநில அரசுகள் தரப்பில் இணைய வழி கற்பித்தல் வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விதிமுறைகள் எதுவுமின்றி இணையவழி வகுப்புகள் நடந்து கொண்டு இருப்பதை மத்திய - மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும்.

இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, அறிவுத் திறன் பேசி போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால், உண்மை நிலை என்ன?

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் 4.4 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 விழுக்காடு வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.9 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 42 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள வசதிகள் உள்ளன.

மேலும் இவையன்றி, அறிவுத்திறன் பேசி வைத்துள்ளவர்கள் 24 விழுக்காடுதான் என்றும், 11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் போன்றவை இருப்பதாக என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வு அறிக்கை 2017-18 தெரிவிக்கிறது.

‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

மேலும் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு நீண்ட தூரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

கர்நாடக அரசு 5 ஆம் வகுப்புவரை நேரலை இணைய வழி வகுப்புகளுக்கு தடைவிதித்துள்ளது. எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.