அமர்த்தியா சென்னை மதிக்காத மோடி அபிஜித் பான்ர்ஜியை கண்டுகொள்வாரா? நோபல் அறிஞர்கள் ஏன் மோடியை திட்டுகிறார்கள்!

வறுமை ஒழிப்பு குறித்த பொருளாதார ஆய்வுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.


மூன்று பேருக்கு இந்தப் பரிசு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அபிஜித் பானர்ஜி _ எஸ்தர் டுஃப்லோ தம்பதியரில் அபிஜித் இந்தியர் என்பதில் நமக்கு கொஞ்சூண்டு பெருமை.

பொருளாதாரத்திற்காக நோபல் விருதுபெறும் இரண்டாவது நபர் என்று பெருமையுடன் வாழ்த்தியிருக்கிறார் மன்மோகன் சிங். வறுமை ஒழிப்புக்கு அபிநவ் ஆய்வு மிகவும் பொருத்தமானது என்றும் கூறியிருக்கிறார்.

கொல்கத்தாவில் பிறந்தவரான அபிஜித்திற்கு பெற்றோர் இருவருமே கல்வித் துறையில் இருந்ததால் சிறுவயது முதலே கல்வியில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில். 1981ம் ஆண்டு கொல்கத்தாவில் இருக்கும் பிரசிடென்சி கல்லூரியில் பிஎஸ்சி பொருளாதாரம் படித்தார். பின்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். 1988ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அபிஜித், பின்னர் அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்று விட்டார்.  

இவரோடு சேர்ந்து நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் எஸ்தர் டப்ளோ வேறு யாருமல்ல, அபிஜித்தின் மனைவி தான். மிகச் சிறந்த பொருளாதார வல்லுநராகக் கொண்டாடப் படும் அபிஜித் தற்போது, ஃபோர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் எம்ஐடி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் மாசெசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

உலகின் பாதி குழந்தைகள் இன்னும் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இவரது திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனால்தானோ என்னவோ, மோடி அரசாங்கம் ஒரு வாழ்த்துடன் நிறுத்திக்கொண்டது. அமர்த்தியா சென், அபிஜித் ஆகியோரை எப்போதுதான் மோடி அரசு கண்டுகொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் இந்தப் பதவி அறிவிக்கப்பட்டதுமே, மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசம் என்று அறிவித்துவிட்டாரே...