பல மணி நேர இழுபறி! கடைசி வரை பரபரப்பு! ஒரு வழியாக தாயகம் திரும்பினார் அபிநந்தன்!

பல மணி நேர இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக அபிநந்தன் வெற்றிகரமாக இந்தியா திரும்பியுள்ளார்.


மாலை 5 மணி 20 நிமிடங்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் எட்டரை மணியை கடந்த நிலையிலும் அபிநந்தனை எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வர முடியாத சூழல் நிலவுகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் குடியேற்றத்துறை விதிகள் தான். பொதுவாக இந்தியர் ஒருவர் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

நாட்டில் இருந்து வெளியேறும் போதும் நாட்டிற்கு திரும்பும் போதும் அவர் பாஸ்பார்ட்டை அடையாளமாக காட்ட வேண்டும். அந்த வகையில் தற்போது அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

எனவே அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் விஷா இல்லாமல் ஒரு நாட்டிற்குள் சென்று திரும்பியதால் பல்வேறு ஆவணங்களை அபிநந்தனுக்கு தயார் செய்ய வேண்டியுள்ளது.

அதோடு மட்டும் அல்லாமல் எதிரி நாட்டின் ராணுவத்திடம் இரண்டு நாட்கள் வரை இருந்துள்ளார் அபிநந்தன். எனவே அவரது உடல் நிலை சீராக உள்ளதை இந்திய மருத்துவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் அபிநந்தன் உடல் முழுவதையும் சோதனை செய்ய வேண்டும், மேலும் அவரது உடலில் உளவுக் கருவிகள் எதையும் பாகிஸ்தான் ராணுவம் செலுத்தியுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி அபிநந்தனை விடுவிக்க சிறிது தாமதம் என்கிறார்கள். இதன் பின்னர் அவர் இந்திய அதிகாரிகளோடு வெற்றி நடை போட்டு தாய் மண்ணிற்குள் காலடி வைத்தார். அப்போது அங்கு உணர்ச்சிகரமான காட்சிகள் அரங்கேறின.