பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதில் ரஜினி, அஜித் இருவரில் யார் பெஸ்ட்? நேர்கொண்ட பார்வைக்கு வித்தியாசமான விமர்சனம்!

பெண் ரசிகைகள் ரஜினிக்கும் அஜித்துக்கும் ஏகமாக இருக்கிறார்கள்.


இந்த நிலையில், ரஜினி, அஜித் ஆகிய இருவரில் எந்த நடிகருக்கு பெண்கள் மீது உண்மையான மதிப்பு இருக்கிறது என்பதை நேர்கொண்ட பார்வை படத்தின் விமர்சனமாக இல்லாமல், அவர்கள் நடித்த படத்தில் இருந்து எடுத்து பட்டியல் போட்டிருக்கிறார் பத்திரிகையாளர் வினி சர்பனா. இதோ, படித்துப்பாருங்கள்.

ஒரு பொண்ணை பார்த்த உடனே அப்டியே ரெண்டு  கைய எடுத்து கும்பிடணும்போல இருக்கில்ல. அது சாத்வீகம். அதே ஒரு பொண்ணை பார்த்தா, பார்த்த உடனே  *** (கட்டிபிடித்து ஆக்‌ஷன் காண்பிப்பார் ரஜினி) அது பச்சோதகம். அதுவே ஒரு பொண்ண பார்த்தா பயம் வருமில்ல.

அது பயானகம் என்று மூன்று விதங்களாக பெண்களின் குணங்களைப் பிரித்து ஏற்கனவே பெண்கள் மீதான 'கோணல் கொண்ட பார்வையோடு' சுற்றித்திரியும் பெரும்பாலான ஆண்களுக்கு இன்னும் இன்னும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்வையை தனது படங்களில் ஊட்டுவார் 'ரீல்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

'நோ.......  எல்லோருமே பெண்கள்தான்; குடும்பப்பெண்கள்தான். பெண்களில் தனித்தனி பெண்கள் எல்லாம் இல்லை. உங்களுடன் தனியறைக்கு வந்துவிட்டால்... உங்களுடன் மது போதையில் இருந்தால்... உங்களுடன் ஜாலியாக பேசிவிட்டால், அவள் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும், ஏன் உங்களது மனைவியாகவே இருந்தாலும் அவளது விருப்பமில்லாமல் தொடக்கூடாது' என்று நேர்கொண்ட பார்வையுடன் ஓங்கி அடித்துச் சொல்லியிருக்கிறார் 'ரியல்' சூப்பர் ஸ்டார் அஜித்குமார்.

ஒரு பொண்ணைப் பார்த்ததும் அப்படித்தோன்றுவது பச்சோதகம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதாக ரஜினி சொல்வது எப்பேர்ப்பட்ட பாலியல் வன்முறை நிறைந்த வசனம் அது. அதே படையப்பாவில், பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பாடம் நடத்துவார். 

பழைய படங்களில் 'இங்கிலீஷு படிச்சாலும் இப்படித்தான் இருக்கணும் பொம்பள'  போன்ற காலங்காலமாக தமிழ்சினிமாவில் பசுமரத்து ஆணிபோல அடித்துவைக்கப்பட்டிருந்த  தேவையில்லாத ஆணிகளை பெருஞ்சுத்தியல் வைத்து பிடுங்கி வீசியிருக்கிறார் அஜீத் 

பெண் விடுதலையை விரும்பிய சுப்பிரமணிய பாரதியின் வரியையே படத்தின் தலைப்பாக வைத்ததால் அஜீத்திற்கு பரத் சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது சூப்பர்ப். சில நிமிடங்களே வந்தாலும் வித்யா பாலன் கெத்யா பாலன். மிரட்டல் ஃபோன்காலைக்கூட தைரியத்துடன் ஹேண்டில் செய்யும் தைரியமான பெண்ணாக நம் மனதில் நிற்கிறார். 

பாலியல் கல்வி பாடமாக வருகிறதோ இல்லையோ 'படமாக' வந்துவிட்டது. பாடம் நடத்தியவர் தல மத்திய அரசு பாலியல் கல்வியின் அம்பாசிடராக ஒருவரை நியமிக்கவேண்டும் என்றால் தல அஜீத்துதான் தகுதியானவர். ஏற்கனவே, விஸ்வாசம் படத்தின் மூலமும் பெண் குழந்தைகள் மீதான அன்பையும் பாசத்தையும்  திகட்டாத தேனாய் பெற்றோர்களுக்கு ஊட்டியவர். இப்படத்தில், அதையும் தாண்டி பெண்களின் மீதான ஆண்களின் பார்வையையே மாற்றுகிறார். 

ஆணுக்குப்பெண் சமம் என்று புரட்சிப் போராட்டம் நடத்தவில்லை... மாறாக புரியவைக்கிறார் தல.  பெண்கள் மீதான ஆண்களின் தவறான பார்வையை 'ஆபரேஷன் தல' மூலம் அறுவை சிகிச்சை செய்து நேர்கொண்ட பார்வையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர்  வினோத்திற்கு பேரன்புகள்.