மிஸ்டர் ஸ்டாலின் நான் சொன்னதில் என்ன தவறு? டாக்டர் கிருஷ்ணசாமி போர்க்கொடி!

பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தா


அதற்கு மிக விரிவாக பதில் அளித்திருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்டாலினுக்கு பல கேள்விகள் எழுப்பியிருக்கிறார். இதோ, கிருஷ்ணசாமி.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து கடந்த 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 16 கட்சிகள் 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஸ்டாலினின் கட்சிப் பத்திரிக்கையில், ”முன்னேறிய வகுப்பினரின் 10% இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்து, தேவேந்திரகுல மக்களை ஏமாற்றி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி! கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிக்கை!”என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த பிராமணர், ஐயர், ஐய்யங்கார், சைவ முதலியார், ரெட்டியார், சைவப் பிள்ளை, நாயுடு, நாட்டுக்கோட்டைச் செட்டியார், இராஜூக்கள், வைசிய செட்டியார் உள்ளிட்ட 69 சமுதாய மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, 10% இடஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நான் பேசியதில் என்ன தவறைக் கண்டீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்? 

உங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கே உங்களோடு ஒத்தக் கருத்து இல்லாத போது, எங்களுக்கு எதிராக மட்டும் அறிக்கை விட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது? அகில இந்திய அளவில், 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயம் அது; தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் வலுவாக இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த வாரத்தில் சட்டமன்றத்திலும் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்; அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தெளிவுபடுத்தினார். 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமலாக்க முன் வந்தால் மருத்துவப் படிப்புக்கான இடங்களில், 25% கூடுதல் இடங்கள் ஒதுக்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றத் தகவலையும் தந்தார்.

10% இடஒதுக்கீட்டால் முற்பட்ட பிரிவினரில் மிகவும் ஏழைகள் தானே பயன்பெறப் போகிறார்கள்; அவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பிள்ளைகள் தானே; எனவே ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?” என்று நான் என்னுடைய வாதங்களை முன்வைத்தேன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் வெறும் ஆத்திரப்படுவது எந்த விதத்தில் நியாயம்? 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு, மேல்நிலைத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக இருந்தும், நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறாத காரணத்தினால் ஒரு மாணவி மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழக்க நேரிட்டது. அதைச் சுட்டிக்காட்டி இன்று வரையிலும் நீட் எதிர்ப்பு அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஆனால், 1400 தமிழ் பிள்ளைகள் மருத்துவம் படிக்கும் ஓர் அரிய வாய்ப்பு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என மொத்தம் 7000 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது அதற்கு ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்? என்று தான் நான் வலியுறுத்தினேன். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொள்ள முடியாது என்று சொல்ல முடியாது; எல்லா இடத்திலும் பொருளாதாரச் சூழலும் அளவுகோலாக இருக்கும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கு முறையாக பதில் சொல்ல முடியவில்லை என்று சொன்னால், அதற்கு மேல் ஸ்டாலினிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தான் பொருள். 

எதிர்கட்சி அந்தஸ்தோடு இருக்கக்கூடிய ஒரு கட்சி நம்முடைய கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டுமென்றால், கொள்கை ரீதியாக சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ’முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்து தேவேந்திரகுல மக்களை ஏமாற்றுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி’ என்று ஒரு மாவட்டத்தைத் தாண்டி வேறெங்கும் அறிமுகமில்லாத ஒரு நபரை வைத்து நமக்கு எதிராக அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? புதிய தமிழகம் கட்சி இம்மண்ணிலுள்ள அனைவரது முன்னேற்றத்திற்கும் குரல் கொடுக்கும் கட்சியே.

சமூகத் தளத்தில் அவர்களுக்கு முற்பட்டோர் என்ற பெயர் இருக்கலாம்; பொருளாதாரத் தளத்தில் அவர்கள் முன்னேறவில்லையென்றால் அவர்களையும் முன்னேற்றுவதற்கு குரல் கொடுக்கக்கூடிய கட்சி தான் புதிய தமிழகம் கட்சி. மத, சாதிய, பொருளாதார வேறுபாடுகளைக் களைவதற்காக பாடுபடக்கூடிய கட்சியே புதிய தமிழகம் கட்சி. பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு குரல் கொடுத்தால் தேவேந்திரகுல வேளாளர்களை எப்படி ஏமாற்றுவதாகும்? இதிலிருந்தே உங்களது நரித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஜாதி வெறியைத் தூண்டி, மத வெறியைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்.

பொய்யான வாக்குறுதிகளால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை வைத்து அகங்காரம் பிடித்து அலையாதீர்கள். சூரைக்காற்று எதை வேண்டுமானாலும் மேலே பறக்க வைக்கும். வஞ்சகம் என்றும் நிலைக்காது மிஸ்டர் ஸ்டாலின். பணத்தாலும், வேறு பலத்தாலும் நீங்கள் பெரியவராகக் காட்டிக் கொள்ளலாம். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறோம். தமிழ் சமுதாயத்தின் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்கிறோம். தேச ஒற்றுமைக்காக என்றென்றும் துணை நிற்போம் என்று தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

ஸ்டாலின் பதில் என்னப்பா..?