ஒரே ரேஷன் கார்டு மூலம் என்ன செய்யப்போகிறது மோடி அரசு? இனி ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை கிடைக்குமா?

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மாற்றியதன் மூலம், இந்தியாவை ஒரே நாடாக இணைத்துவிட்டதாக பா.ஜ.க. மார்தட்டி சொல்லிக்கொள்கிறது. இனி அடுத்த கட்டமாக ஒரே நாடாக மாற்றும் சிந்தனை பா.ஜ.க.வுக்கு வந்துவிட்டது.


மாநிலம் விட்டு மாநிலம், மாநிலத்திற்கு உள்ளேயே  மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்கு உள்ளேயே ஊர் விட்டு ஊர்,  ஊருக்கு உள்ளேயே வட்டம் விட்டு வட்டம்  குடிபெயர வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது. அவர்கள் தங்களுக்கான  குடும்ப அட்டையை  மாற்றிக்கொள்வதற்குள் ஏற்படுகிற அலைச்சலும் மன உளைச்சலும்  இனி இருக்காது என்று ஆசை காட்டுகிறார்கள்.

ஏனென்றால் நிரந்தரமான குடும்ப அட்டை வழங்கப்படுமாம். அப்படி  ஒரே குடும்ப அட்டையை வைத்து எங்கே போனாலும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதை ஏன் மத்திய அரசு செய்கிறது என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.

மாநிங்களில் ஊழல் நடக்கிறது, அதைக் கட்டுப்படுத்தவே இவ்வாறு மத்திய அதிகாரத்திற்கு மாற்றப்படுகிறது என்று வாதிடுகிறார்கள். ஏதோ மாநில அரசுகளில்தான் ஊழல் நடைபெறுகிறது, மத்தியத் துறைகளில் எல்லாம் பரிசுத்தமாக இருக்கிறது என்ற எண்ணத்தைப் பரப்புகிற வேலையல்லவா இது? 

ஊழல் எந்தத் துறையில், எந்த மட்டத்தில் நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படவும் வேண்டும். ஊழலைக் களைவதற்கான நடவடிக்கைகள் பற்றி மாநில அரசுகளுடன் கலந்துபேசி நடைமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தச் செய்ய முடியும். அதே போல் பிற மாநிலத்தவர்க்கு அவர்களது அட்டைகளின் படி தானியங்கள் வழங்குவது பற்றியும் மாநில அரசுகளோடு பேசி, தேவைப்படும் கூடுதல் தானியங்களையும் மத்திய அரசு விநியோகிக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட கலந்துரையாடல் எதையும் நடத்தாமல், இத்தனை மாதங்களுக்குள் இதைச் செயல்படுத்தியாக வேண்டும் என்றும் இல்லையேல் தானியங்கள் நிறுத்தப்படும் என்றும் கெடுபிடி செய்வது எதற்காக?

தமிழகத்தில் கூட மதுரை பகுதியில் அரசாங்கமே நடத்திய ஒரு ஆய்வில், 90 சதவீத போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கு முக்கியக் காரணம் ஸ்மார்ட் அட்டைகள் உள்ளிட்ட கணினிமய நடவடிக்கைகள்தான் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்துமாறு கூற, மற்ற மாநிலங்களும் செயல்படுத்தச் செய்ய யார் தடை போட்டார்கள்? 

ஆக, ஊழலைத் தடுப்பதற்காக மத்திய அதிகாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதா, மத்திய அதிகாரத்தை நிறுவுவவதற்காக ஊழல் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வி எழத்தான் செய்யும். மாநில அளவிலான ஊழலை தேசிய அளவில் மாற்றுகிற வேலையா என்ற கேள்வியும் சேர்ந்தே எழும்.

புதிய அட்டையின் மூலம் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ எங்கு வேண்டுமானாலும் பொருள் வாங்கிக்கொள்ள முடியும் என்று வருகிறபோது, இனி மாநில அரசின் பணி தேவையில்லை என்ற எண்ணமும் ஏற்படுத்தப்படுகிறது. இதுவரையில் மத்திய ஆட்சியாளர்கள்தான் மாநில உரிமைகளைப் புறக்கணித்தார்கள். இனி பொதுமக்களும் மாநில அரசுகளை மதிக்க வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்த முயல்கிறார்கள். கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு இது ஆரோக்கியமானதா?

எளிய மக்கள் தங்கள் மாநிலங்களை விட்டு மற்ற மாநிலங்களுக்குக் குடிபெயர்கிற நிலைமையே ஏன் ஏற்படுகிறது? அந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால்தானே? அதை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் புலம் பெயர்வதை ஊக்குவிப்பது, இவர்களது கொள்கைகளால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. 

ஒரு வேடிக்கையான முரணையும் சுட்டிக்காட்டலாம். வரும் நவம்பருக்குள் தமிழகத்திலும் செயல்படுத்தியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிற உணவு உறுதிச் சட்டத்தின்படி, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அரிசி கோதுமை கிடையாது. 10 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படியோ, ஆண்டு வருவாய் 8 லட்சம் ரூபாய் வரையில் இருக்கிறவர்கள் பொருளதாரத்தில் நலிவுற்றவர்கள். அதாவது அரசு வேலைக்கு 8 லட்சம் ரூபாய் வரம்பு, அரிசி வாங்க 5 லட்சம் ரூபாய் வரம்பு!

உண்மையான நோக்கம், ரேசன் பொருள்களுக்கான மானியத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் போட்டு, பின்னர் படிப்படியாக மானியத்தை விலக்கிக்கொண்டு, பொது விநியோகத்தைச் சார்ந்திருக்கும் மக்களைச் சந்தை சக்திகளின் பிடியில் சிக்க வைப்பதுதான். புரிகிறதா..?