காஞ்சி வரதராஜப் பெருமாள் அருள் மட்டும் இருந்தால் எல்லாம் நலமாக நடக்கும் என்று பலரும் அவரை கும்பிட்டு வருகிறார்கள்.
என்னாது, நம்ம காஞ்சி வரதராஜ பெருமாள் இந்திய தேசத்துரோகியா?

ஆனால், நம் நாடு இத்தனை கேவலமாக இருப்பதற்குக் காரணம் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததுதான் என்பது அசைக்க முடியாத உண்மை. அப்படி ஒரு நிலைமைக்கு வழிவகுத்தது காஞ்சி வரதராஜப் பெருமாள்தான், அதனால் அவர் ஒரு இந்திய தேசத் துரோகி என்று ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது.
அதாவது, ராபர்ட் கிளைவ் ஆற்காடு முற்றுகையை வெற்றிகரமாக முடித்து கஜானாவை அள்ளிக்கொண்டு திரும்பி வரும்போது காஞ்சி வழியே வந்தானாம். அவன் காஞ்சியைத் தாண்டும் போது பெருமழை பிடித்துக் கொண்டதாம். அதனால், கிளைவும் அவனோடு வந்த 200 பேர்கொண்ட படையும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வெளிப்பிரகாரத்தில் இரவு தங்கினார்கள்.
அன்று இரவு, கிளைவுக்கு குளிர் ஜுரம் ஏற்பட்டு ,அவன் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாம். அப்போது, கிளைவுடன் வந்த ஒரு துபாஷி வரதராஜன் கோவில் துளசி தீர்த்தத்தை வாங்கி வந்து கிளைவின் வாயில் ஊற்றினாராம். அவர்தான் வரதராஜனாயிற்றே, காலையில் ராபர்ட் கிளைவ் நோய் நீங்கி உற்சாகமாக எழுந்துவிட்டான்.
தன்னை காப்பாற்றிய வரதராஜனுக்கு கிளைவ் மகர கண்டி என்கிற விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்தான். அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகமும் அதைத் தொடர்ந்து இந்தியாவும் ஆங்கிலேயர் கைக்கு போனது. இப்படி நம் நாட்டை ஆட்டையப் போட வந்தவனை காப்பாற்றிய வரதன் இப்போதும் அந்த 'கிளைவ் மகர கண்டியை' அணிந்து கொண்டு கூச்சமில்லாமல் ஊர்வலம் வருகிறான். இதை தேசபக்தர்கள் கண்டிக்க வேண்டாமா என்று டிஜிட்டலில் செய்தி பரப்புகிறார்கள்.
ஒரு மகர கண்டியைக் கொடுத்து நாட்டையே சுட்டுட்டானேப்பா...