அச்சுறுத்தும் கொரானா..! முடக்கப்படும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள்..! அப்படி என்றால் என்ன? மக்கள் வெளியே வர முடியாதா?

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. முடக்கி வைத்தல் என்றால் என்ன, மாவட்டங்கள் முடக்கப்பட்டால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாதா என்பதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.


பொதுவாக தொற்று நோய்கள் பரவலை தடுக்க முக்கியமான மூன்றுவித கட்டுப்பாடு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளும். அந்த வகையில் குறிப்பிட்ட பகுதிகளை முடக்கி வைப்பது, குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிப்பது, குறிப்பிட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது என்பது ஆகும்.

இதில் முடக்கி வைக்கப்படுவது என்பது தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முதல் நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது தற்போது கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு மாவட்டங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். முடக்கம் என்றால் எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதாவது முதலில் மக்கள் கூட்டமாக வெளியேற தடை விதிக்கப்படும். மேலும் கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப், பால் பூத் போன்றவை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். சாலைகளில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

இதே போல் முடக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார். அதாவது குறிப்பிட்ட காலம் வரை இந்த முடக்கம் அமலில் இருக்கும். உதாரணமாக தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை மூன்ற மாவட்டங்கள் முடக்கப்பட உள்ளன. இந்த காலகட்டத்தில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், பொழுது போக்கு மையங்களுக்கு அனுமதி இருக்காது.

பெரும்பாலும் மக்கள் வீடுகளில் இருக்கவே அறிவுறுத்தப்படுவர். அத்தியாவசிய தேவைகள் என்றால் வெளியே செல்லலாம். மீறிச் சென்றால் போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பர். உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும். இதற்கு பெயர் தான் முடக்கம் என்பதாகும்.