அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? இந்த நாட்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் அப்படி என்றால் என்ன இந்த கால கட்டத்தில் என்ன எல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்.


அக்னி நட்சத்திரம் எனப்படும் வெயில் காலம் இன்று மே 4 அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கியுள்ளது. இருபத்தி ஆறு நாட்களுக்கு மக்களை வாட்டி வதைத்து மே 29 ம் தேதி காலை ஏழு மணியளவில் முடிவடையும். அதே சமயம் அதிக வெப்ப காலமாக கருதப்படும் கத்தரி வெயில் மே 12 ம் தேதி தொடங்கி முதல் மே மாதம் 25 வரை நீடிக்கும். 

பூமி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடத்தில் மட்டுமே அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் எல்லாம் உண்டு. வானிலை ஆய்வாளர்களை பொறுத்தவரை அப்படி ஒன்று கிடையாது.அதாவது மேஷராசியில் சூரியன் நுழையும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. உண்மையில் சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருக்க நமது பூமிதான் இந்த மேஷ ராசியில் நுழைகிறது. சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதால் தான் இந்த கால கட்டத்தில் வெயில் கொளுத்துகிறது.

ஒரு சிலர் சூரியனுக்கு அருகில் பூமி செல்லும்போது கோடைகாலம் ஏற்படுவதாக தவறாக நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பருவகாலங்கள் பூமி சாய்ந்திருக்கும் கோண அளவின்படியே உண்டாகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.

ஆடி தொடங்கி ஆவணி மற்றும் புரட்டாசி சிறிது வரை நமது பூமி சூரியனுக்கு அருகாமையிலும் தை மாதத்தில் அதிகமாக விலகியும் இருக்கிறது. ஜோதிடப்படி மேஷம் சிம்மம் தனுசு எனப்படும் மூன்று நெருப்பு ராசிகளில் அதிபலமிக்க சர நெருப்பு எனப்படும் மேஷராசியில் நெருப்புக் கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து ஆதவனின் நட்சத்திரமான கிருத்திகை முழுக்க நம்மைச் சுட்டெரித்து சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தை தாண்டும்போது முடிவடையும்.

இதில் சூரியன் தனது சுயநட்சத்திரமான கிருத்திகையில் செல்லும் காலமே அதிக வெப்பமான நாட்களாக இருக்கும். அதற்கு முந்தைய பரணி நட்சத்திர காலத்தை முன் கத்தரி என்றும் பிந்தைய ரோகிணி நட்சத்திர காலத்தை பின் கத்தரி என்றும் சொல்வதுண்டு. அக்னியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களைச் செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை. வெயில் சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வசதி உள்ளவர்கள் எளியவர்களுக்கு அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் மோர் பானகம் போன்றவைகளை வழங்குவதன் மூலம் கோடிப் புண்ணியம் பெறலாம்.