Vodafone செல்ஃபோன் சேவை நிறுவனம் இந்தியாவில் இழுத்து மூடப்படுகிறது..! அதிர்ச்சி காரணம்!

டெல்லி: வோடஃபோன் இந்தியா எந்நேரத்திலும் கடையை சாத்திவிட்டு வெளியேறலாம், என தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வோடஃபோன் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது வர்த்தகப் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் ஐடியா செல்லுலர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஆனால், இந்த கொள்முதல் பணியில் வோடஃபோன் நிர்வாகத்திற்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி நாளுக்கு நாள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் கிடுகிடுவென சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதால், வேறு வழியின்றி மூட்டை கட்டும் நிலைக்கு வோடஃபோன் வந்துவிட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவ தொடங்கியுள்ளது.  

இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வோடஃபோன் நிர்வாகத்திடம் சந்தேகம் கேட்க, அவர்கள் உரிய பதில் இதுவரையிலும் அளிக்கவில்லை. எனினும், ஐடியா செல்லுலர் நிறுவனத்தை வாங்கியதற்காக, இந்திய அரசுக்கு தகுந்த கட்டணங்களை வோடஃபோன் வழங்கவில்லை. மேலும், கடன்தாரர்களின் நிலுவைத் தொகையையும் சரிவர செட்டில்மென்ட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்பேரில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரிக்கப்பட்டபோது, பதில் அளித்துப் பேசிய வோடஃபோன், இன்னும் சில நாட்களில் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டப்படும், எனக் குறிப்பிட்டிருந்தது. இது பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.