ஜாதிவாரிக் கணக்கெடுப்புதான் வேண்டும். கோரிக்கை வைக்கும் வீரமணி

ஜாதி சட்டப்படி ஒழிக்கப்படாதவரை, ஜாதி - அதன் தொடர்பான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவையே என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.


உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கு - வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சென்சஸ் -2021 இல், இந்திய நாட்டு குடிமக்களின் ஜாதி வாரியாகவும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்கள் தொகை எப்படி உள்ளது என்பதை அறிந்து இட ஒதுக்கீடுகள் அளிப்பதற்கு ஏற்ப அந்த மக்கள் தொகை புள்ளி விவரங்கள் பயனுள்ளதாக அமையக்கூடும் என்பதால், மத்திய அரசு வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் அந்த முறையை அவசியம் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஆணையிட, அந்தப் பொதுநல வழக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உள்துறைக்கு இதுபற்றி பரிசீலிக்கலாம்; இது நல்ல யோசனை - கோரிக்கைதான் என்ற கருத்துக் கூறி, ‘‘நோட்டீஸ்’’ அனுப்ப ஆணையிட்டிருக்கிறது. இது ஒரு நல்ல செய்தியாகும்; நாம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறோம்; நாட்டில் உள்ள பல்வேறு சமூகநீதிக் கோரும் பல சமூக அமைப்புகளும், சமூக விஞ்ஞான உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தவே செய்கின்றனர்!

உடனே ஒரு சிலர், குறிப்பாக வெகுச் சிறுபான்மையராகவும், ஆதிக்கவாதிகளாக கல்வி, உத்தியோக மண்டலங்களில் ஏகபோக ராஜ்ய பரிபாலனகர்த்தாக்களாகவும் உள்ளவர்கள் ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு போடுவார்கள். 

ஜாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? அவர்களுக்கு ஒரே ஒரு நேரடிக் கேள்வி. நாட்டில் ஜாதி இருக்கிறதா? இல்லையா? நாட்டில் ஜாதி ஒழிந்துவிட்டதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி’ என்ற சொல் 18 இடங்களில் வருகிறதா? இல்லையா? ஜாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? இடம் பெற்றிருக்கிறதா?

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியாக சென்சஸ் நடத்தினால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய ஜாதியினர் என்று பலரையும் கொண்ட சமுதாயத்தில் அவரவர் மக்கள்தொகை எண்ணிக்கை, இட ஒதுக்கீடு உள்பட பலதுக்கும் பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.