மோடியின் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்துக்கு வீரமணி பாராட்டு, அடுத்துஎன்ன நடக்கப் போவுதோ?

1930 -ஆண்டுகளிலேயே குடும்பக் கட்டுப்பாடுபற்றி தந்தை பெரியார் பேசியிருக்கிறார். அதை இப்போதாவது மோடி பேசினாரே என்று சுதந்திரத் தின உரையை வரவேற்றுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.


தந்தை பெரியாரும், அவர்தம் அரசியல் சாரா சுயமரியாதை இயக்கமும் இந்தியாவிலேயே முதன்முதலில் கர்ப்ப ஆட்சி - குடும்பக் கட்டுப்பாடு என்பதை கொள்கை வேலைத் திட்டமாகப் பிரசாரம் செய்தார்கள்! ‘கர்ப்ப ஆட்சி’ எனும் நூலினையும் வெளியிட்டார்.

அப்போது மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் பலர்,  ‘அய்யோ பகவான் கொடுக்கிறான்; இவன் தடுக்கிறானே’ என்று சுயமரியாதைக்காரர்களையும், அவர்தம் தலைவர் தந்தை பெரியாரையும் இழித்தும், பழித்தும், எதிர்த்தும் பேசினர்.

அதுமட்டுமா? இப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் - பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்பட பலரும், ஹிந்துக்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டால், அவர்கள் மைனாரிட்டிகளாகி விட்டு, மற்ற மதத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். எனவே,  ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் 10 பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று மதக் கண்ணோட்டத்தில் வெறித்தனமாகப் பேசினர்.

தந்தை பெரியார், சமுக வளர்ச்சி, முன்னேற்றம், மனித குலத்தின் சரி பகுதியான பெண்களின் உரிமை வாழ்வு, சமத்துவ சமவாய்ப்புக் கண்ணோட்டத்திலேயே இந்த மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் அவசியம்குறித்து சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரத்தின் முன்னோடியாக இருந்தார்! 

1947-க்கு முன்பிருந்த பாகிஸ்தானும் சேர்ந்த இந்தியாவின் ஜனத்தொகை வெறும் 30 கோடி. ஆனால், இன்று இந்திய நாட்டின் மக்கள் தொகை மட்டும் 136 கோடி! எவ்வளவு வளர்ச்சித் திட்டங்களைப் போட்டாலும், அவை ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்பது போலவே ஆகிவிடுகிறது!

எப்படி இருந்தபோதிலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அளவான குடும்பம்தான் வளமான குடும்பமாக இருக்க முடியும் என்பதே யதார்த்தம் ஆனபடியால், இதில் மதக்கண்ணோட்டம், ஜாதிக் கண்ணோட்டம், அரசியல் பார்வை - நுழையக் கூடாது.

ஓட்டுக் கண்ணோட்டத்தைவிட, நாட்டுக் கண்ணோட்டத்தையே முக்கியமாகக் கருதவேண்டும் என்று பாராட்டி இருக்கிறார். வீரமணி பாராட்டினால் அது உருப்படாது என்று சொல்வார்கள், என்னதான் நடக்கப் போகிறதோ?