ராஜ்யசபா திமுக எம்பியாகும் வைகோ மகன்! அதிர்ச்சியில் மதிமுக!

நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு எனும் ஒரே ஒரு பகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. பிறகு மதிமுகவிற்கு மாநிலங்களவை எம்பி பதவி ஒன்றை தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. இதனை ஏற்று மதிமுக திமுகவுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டது.

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறி வைகோ மதிமுகவினரை அதிர வைத்தார். அதாவது கணேசமூர்த்தி மதிமுகவில் இருந்தாலும் அவர் திமுக உறுப்பினராக போட்டியிட்டு எம்பி ஆகி தற்போது மக்களவையில் திமுக எம்பி ஆகவே செயல்பட உள்ளார்.

இதற்கிடையே மாநிலங்களவையில் தருவதாக ஒப்புக் கொண்ட ஒரு எம்பி பதவியை மதிமுகவிற்கு வழங்க திமுக தற்போது முன்வந்துள்ளது. இதனையடுத்து மதிமுக சார்பில் வைகோ மாநிலங்களவை எம்பி ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவை எம்பியாக வைகோ தற்போது விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அவர் தனது மகன் துரை வையாபுரி மாநிலங்களவை எம்பியாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்து திமுகவிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதாவது தனக்கு கிடைத்த எம்பி சீட்டை தனது மகனுக்கு கொடுக்க வைகோ முடிவெடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கும் மதிமுக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. எத்தனையோ பேர் துரோகம் செய்துவிட்டு வைகோ விடம் இருந்து வேறு வேறு கட்சிக்கு சென்ற நிலையிலும் தொடர்ந்து மதிமுகவில் இருக்கும் பலரில் ஒருவரை எம்பி ஆக்காமல் வைகோ தனது மகனை ஆக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்விகள் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனை வைத்து முகத்திற்கு நேராக சொல்லாவிட்டாலும் மதிமுக நிர்வாகிகள் இது குறித்து பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் தங்கள் கட்சி சார்பில் யார் எம்பி என்பதை அறிவிக்க முடியும் என்றும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைத்துமே யூகம் மற்றும் வதந்தி என்று கூறி முடித்துக் கொண்டனர்.