கூடங்குளம் அணுஉலைகளை இழுத்து மூடுங்க...! வைகோ வேண்டுகோள்.

கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் 'ஹேக்' செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர் எம்.பி. ட்வீட் செய்தபிறகுதான் படு வைரலாக விஷயம் பரவியது.


வடகொரியாவைச் சேர்ந்த டிக்ராக் என்ற வைரஸ் மூலம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதனை கூடங்குளம் அணுமின் நிலையம் மறுத்துவந்தது. இரண்டாவது அணு உலை நிறுத்தப்பட்டதற்கு இது காரணம் அல்ல என்றும் சொன்னது. ஆனால், இந்திய அணு மின்சக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், கூடங்குளம் அணுஉலை இணையதளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை ஒப்புக்கொண்டது. 

இதுகுறித்து வைகோ இன்று ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்தியாவின் தென் கோடி மாநிலமான, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் உலைகளால் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அண்டை நாடுகளின் ராணுவ இலக்காக ஆகக் கூடிய அபாயம் கூடங்குளம் அணுஉலைக்கு இருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நான் சுட்டிக்காட்டி வருகின்றேன்.

ஆனால் மத்திய - மாநில அரசுகள் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இருப்பது மட்டுமல்ல, அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கவும் திட்டமிடுவது தென் தமிழக மக்களின் மீது நெருப்பை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும். தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

இதை எல்லாம் மோடியை நேரில் பார்த்து சொல்ல மாட்டாரே..!