ஒரு பிளேட் ரூ.1500! ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து!

இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான ஹில்டனில் உதயநிதி ஸ்டாலின் தடல் புடல் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.


திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 474 பேருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த 474 பேருமே இன்று சென்னை ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு தவறாமல் வந்து சேர்ந்தனர். வழக்கம் போல் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:

வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள்ளான 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என நம் நிர்வாகிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது இந்தக் கூட்டம்.

15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என்பதையும் இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

தூர்வாரப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் நீர்நிலைகள், அதிக பிளாஸ்டிக் பயன்பாடுகள்... இப்படியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க நம் தி.மு.க இளைஞரணி இனி அதிக கவனம் செலுத்தும். இதை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இந்த தீர்மானங்கள் தவிர வழக்கம் போல் கலைஞர், ஸ்டாலினை புகழ்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் தடல் புடல் நான்வெஜ் விருந்து பறிமாறப்பட்டது. அந்த வகையில் ஒரு பிளேட்டின் விலை ரூ.1500 என்று கூறப்படுகிறது.

வழக்கமாக திமுக கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு டீ – மிக்சர் என்பதோடு கலைஞரும் ஸ்டாலினும் அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் அதிமுக கூட்டம்எ ன்றால் அசைவ உணவு கமகமக்கும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் – ஈபிஎஸ்சும் அதிமுக கூட்டங்களில் அசைவ உணவை காட்டுவதில்லை.

ஆனால் திமுக இளைஞர் அணிச் செயலாளர் தன்னுடைய முதல் கூட்டத்திலேயே சுடச்சுட அசைவ உணவு பறிமாறியது திமுகவினரை உச் கொட்ட வைத்தது.