தந்தை பாசம்! பைக்கில் பறந்த சகோதரர்கள்! ஓவர்டேக்கில் கவனக்குறைவு! வேனில் மோதி தீ பற்றி கரிக்கட்டையான பரிதாபம்!

அரியலூர் மாவட்டத்தில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


பெரம்பலூரை சேர்ந்த முஜிபுல்லா என்பவரின் மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். துபாயில் பணிபுரியும் தந்தையிடம் சில பொருட்களை அவருடன் பணிபுரியும் நண்பரிடம் கொடுத்தனுப்ப தஞ்சை சென்று கொண்டு இருந்தனர்.

இவர்கள் சாத்தமங்களம் என்னும் பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே, அரியலூரை நோக்கி திருமண வீட்டாருடன் வந்து கொண்டிருந்த ஒரு வேன் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இருசக்கர வாகனம் மோதியதில் வேனின் பக்கவாட்டில் இருந்த டீசல் டேங்க் சேதம் அடைந்தது.

அதில் இருந்து டீசல் கசியத் தொடங்கியது. பின்னர் வேன் திடீரென தீப் பிடிக்கத் தொடங்கியது. இந்த விபத்தில் வேனில் அடிப் பகுதியில் சிக்கிக் கொண்ட பயாஸ் தீயில் கருகி உயிர் இழந்தார். ஜமீல் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தீ மள மளவென எரியத் தொடங்கியது வேனும், இருசக்கர வாகனமும் தீயில் கருகின. தீ பற்றியவுடன் விபத்தில் காயம் அடைந்த வேனில் இருந்த 15 பேர் உடனடியாக கீழே இறங்கினார்.

அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.