இன்று மக்கள் குடத்தைத் தூக்கிகொண்டு தண்ணீருக்கு அலைவதற்கு காரணகர்த்தா யார்? ஒரு குடம் தண்ணீர் இனி எவ்வளவு தெரியுமா?

இன்று இந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் வீதி வீதியாக அலையும் அவலங்களுக்கு என்ன காரணம்? யாரைக் குற்றம் சொல்வது?


அரசையா? பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களையா? தனி மனிதனையா?

சமீபத்திய ஒரு ஆய்வு தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 4.45 மீட்ட ஆழத்திலிருந்து 7.85 மீட்டருக்கு சென்று விட்டதாகவும் அதனால் வற்றாத நீர்நிலைகள் கூட வற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறதாகவும். மேலும் அரியலூர், சேலம், கோவை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் புதிதாக கிணறு மற்றும் போர் தோண்டுவதற்கு தடைவிதித்து கருப்புப் பகுதியாக (black area) அறிவித்தது தமிழக அரசு. 136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன என்று தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் 2009-ம் வருடத்திய  அறிக்கை கூறுகிறது

தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.

குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடை, தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு செய்வதை தங்கள் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும்என்ற அரசின் சட்டங்கள் வரைமுறையில்  இருந்தாலும்.!

300க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை (RED CATEGORY) என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வகைப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலந்து நிலத்தடி நீரினை மாசுபடுத்துகிறது என கூறுகிறது ஒரு ஆய்வறிக்கை !!

மேலும் ஆலைக்கழிவுகளால் நிலத்தடி மற்றும் ஆற்று நீர் விஷமாவது மட்டுமல்லாது. நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. தண்ணீரில் இயல்பாக உள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உடன், இக்கழிவுகளில் உள்ள நைட்ரஜன் பாஸ்பேட்டும் கூடுதலாக சேர்வதால் நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்து, ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றதுஎன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்!

நிலைமை இப்படி இருக்க மழை வேண்டி யாகங்கள் நடத்த அறிவுருத்தியிருக்கிறது தமிழக அரசு. குடிநீரை விஷமாக மாற்ற பெரு முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து., பின்னர் யாகத்தில் வேதம் ஓதி யாருக்கு என்ன பயன்.??

மெத்த படித்த மேதாவிகள் பகுதி என்ற மாயையை உருவாக்கியுள்ள. சென்னையின் மையப் பகுதியான அசோக்நகர் மேற்கு மாம்பலம் சைதாப்பேட்டை கிண்டி போன்ற பகுதிகள் நிலத்தடிநீரை சேமிக்காத பட்சத்தில் கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்டது இந்த கோடையில்.  ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு‌ அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டதும். அதைப் பொருட்படுத்தாமல் அஜாக்கிரதையாக இருந்ததன் காரணம் இன்று இந்த பகுதிகளில் தண்ணீர் லாரிகளின் வருகையை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

உதாரணமாக சென்னை மேற்கு மாம்பலம் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதி‌ என காலம்காலமாக நிலவி வரும் செய்தி. மாம்பலத்துக்கு போனால் யானைக்கால் வியாதி வரும் என்கிற பழமொழி உண்டு. அப்படிப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை உள்ள இந்த பகுதியில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு குடியேறவே பலர் யோசித்த காலமுண்டு.

ஆனால் காலப்போக்கில் மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக பழைய பஞ்சாங்கமெல்லாம் தூக்கியெறியப்பட்டு இன்று மக்கள் தொகை பெருக்கத்தால் திக்கிக் திணனிக்குகொண்டிருக்கிறது இந்த பகுதி. சென்னையில் உள்ள பல இடங்களுக்கு இது ஒரு சிறிய உதாரணம் தான். இன்னும் சொல்லென்னா துயரத்தில் பல பகுதி மக்கள் ஆத்திரத்தோடும் அவஸ்தைகளோடும் தங்கள் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திச் கொண்டு இருக்கிறாகள்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் என விற்பனை செய்வதையும். அதையும் வாங்குவதற்கு மக்கள் போட்டி போட்டிக்கொண்டு வரிசையில் நிற்பதையும் கண்கூடாக காண்கிறோம் நிகழ்கால கலியுகத்தில். அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாக்கப்படவில்லை என்பதே இந்த அவலங்களுக்கு காரணமாகும். 

1960-ல் 22.5 லட்சம் ஏக்கராக இருந்த குளத்து நீர் பாசனம் 2000–ல் 15.75 லட்சம் ஏக்கராகவும், தற்போது 10 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது, ஒரு குளத்தின் மூலம்  சராசரியாக 48 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இன்று 30 ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிட்டது!

2015ல் மாநில அரசும் நிதி இல்லை எனக்கூறி பெரும்பாலான ஏரிகள் மற்றும் அணைகளை தூர்வாராமல் விட்டதால் மழை நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நீர் தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஓடைகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் தெருக்களிலும் சாலைகளிலும் ஓடி நீர் வீணானது, தெருவிலும் கூட சிமென்ட் பூசி நீரை நிலத்துக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டார்கள். ஆறுகள் நிலையோ மேலும் அவலம். அளவிறந்த மணல் கொள்ளையால், பருவ காலத்தில் நீரை உறிஞ்சி கோடை காலத்தில் கொடுக்கமுடியாமல் ஆறுகள் தவித்து.

வெள்ளத்தை கடலுக்கு விரயமாக்கி தமது வேதனையை வெளிப்படுத்துகின்றன வானம் பார்த்த பூமியாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் ராமநாதபுரம் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மழை நீரை நம்பியே விவசாயங்களை செய்து வருகின்ற வேளையில். அந்தந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் சரியாக செயல்படுத்தியிருந்தால் இந்த கோடையில் ஓரளவு குடிநீர் பஞ்சத்தை சமாளித்திருப்பார்கள்.

நிலத்தடித் தொட்டி, கிணறு, தெப்பக் குளம் கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய பல வகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறும் இம்மாவட்டங்களில், நடப்பில் உள்ள விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது, இதில் கால்வாய் பாசனம் மூலம் 29.2 சதவிகிதமும் குளத்துப்பாசனம் மூலம் 21.3 சதவிகிதமும், கிணற்றுப்பாசனம் மூலம் 48.9 சதவிகிதமும் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மறுபுறம் தண்ணீரின் தேவைக்காக காட்டிலிருந்த விலங்குகள் ஊருக்குள் வருவது சமீபத்திய தொடர் செய்தியாகவே வருகிறது தினம் ஊடகங்கள் வழியாக. அண்மைக்காலமாக தண்ணீர் வசதி இல்லாத வட மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி பல ஆறுகளிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக வீராணம் போன்ற நீராதாரத்திலிருந்து ஒரு நாளைக்குப் பல லட்சக் கணக்கான லிட்டர் நீர் மோட்டாரால் உறிஞ்சப்பட்டு வழங்கப்படுகிறது.