நல்லாத்தான் நடக்குது திருவள்ளுவர் நாடகம்..! மோடிக்கு சூடு வைக்கும் வன்னி அரசு.

திருவள்ளுவருக்கு காவி கட்டிவிட்டு பட்டை அடித்து ஹிந்துத்துவா சாமியாராக அவரை மாற்ற முயற்சிக்கும் பா.ஜ.க.வின் லீலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு. இதோ அவரது அறிக்கை.


திருக்குறள் இன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது என்றால் ‘பட்லர்’கந்தப்பன் அய்யா தான் காரணம். இவர்தான் திருக்குறளை காப்பாற்றி பாதுகாத்தவர். பழைய பொருட்களை எரித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியர் எல்லீஸ் துரை. அப்போது துரையிடம் பணிபுரிந்த பட்லர் கந்தப்பன் பார்வையில் திருக்குறள் சுவடி பட்டது.  

1816 ஆம் ஆண்டு அந்த திருக்குறளை காப்பாற்றி பாதுகாத்தார்.திருக்குறளின் பெருமையை உலகுக்கு அளித்த அந்த கந்தப்பன் வேறு யாருமல்ல, பவுத்த அரசியலை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த அயோத்திதாசப்பண்டிதரின் தாத்தா.

சித்தமருத்துவ பின்னணியில் வாழ்ந்த குடும்பம் தான் பண்டிதரின் குடும்பம். பவுத்த பின்னணி.

அப்படிப்பட்ட குடும்பத்தினர் மீட்டெடுத்த திருக்குறள் இன்றைக்கு விவாதமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க.வால் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளார் திருவள்ளுவர்.

‘தெய்வத்தான் ஆகாது’ என்று சொன்ன அய்யன், ‘எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்று கடவுளால் எந்த வேலையும் ஆகாது நீயே தான் செய்யவேண்டும் என்று சொன்ன திருவள்ளுவரை மதச்சாயம் பூசுகிறது பாஜக.

‘நான்கு வர்ணத்தை நானே படைத்தேன்’ என்னும் பகவத்கீதையின் சனாதனத்தை ஏற்று நடைமுறைப்படுத்த துடிக்கும் பாஜக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்னும் சனநாயகத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திருவள்ளுவரை பாஜக காவி வர்ணம் பூசுகிறது.

இந்துத்துவத்தை மூலதனமாக்கி கிறத்துவ, இசுலாமிய மதங்களுக்கு எதிராக வெறுப்பரசியலை

செய்து வரும் பாஜக, திருவள்ளுவருக்கு மத அடையாளத்தை திணிக்கிறது.

ஏன் திருவள்ளுவரை பாஜக தமது அரசியலுக்கு பயன்படுத்துகிறது?

இந்த திருவள்ளுவர் அரசியலை தருண் விஜய் என்னும் பாஜக எம்பி மூலமாக நீண்ட காலத்துக்கு முன்பே செய்ய முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதுமட்டுமல்லாது தமிழகத்திலிருந்து எடுத்து போன திருவள்ளுவரை எப்படி கோணிச்சாக்கில் போட்டு அவமதித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

அதன்பிறகு பிரதமர் மோடி அடிக்கடி திருக்குறளை சொல்ல ஆரம்பித்தார். இதுவெல்லாம் திருக்குறளின் மீதான பற்றா? அல்லது தமிழின் மீதான அக்கறையா? அப்படி பற்று இருந்தால் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கலாமே? இந்தியை -சமஸ்கிருதத்தை ஏன் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும்?

இந்தியா முழுக்க பாஜக தமது மத அடையாள அரசியலை வெற்றிகரமாக செயல்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அது முடியவில்லை. வரும் 2021 - பொதுத்தேர்தலுக்குள் பாஜக எந்த அடையாள அரசியலையாவது பிடித்து தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த திருவள்ளுவர் அரசியல்.

தமிழருக்கு தமிழுக்கு முதலில் பாஜக எதிரி அல்ல என்பதை அறிவிக்கும் முயற்சிதான் தாய்லாந்து மொழியில் திருக்குறளை மோடி வெளியிட்டது. தமிழ்நாட்டில் திருக்குறளுக்கான அங்கீகாரத்தை அப்படியே பாஜக அரசியலுக்கான அங்கீகாரமாக மாற்ற முயற்சிக்கிறது. அதன் ஒரு உத்தி தான் வள்ளுவருக்கு பட்டை அடித்து காவி உடுத்தியது. இந்த முயற்சி என்பது பாஜகவின் கேவலமான அரசியலாகும். மலிவான அரசியலாகும். இது ஒரு ஏமாற்று உத்திதான் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.