வீட்டுப்பாடம் செய்ய மறந்து வந்த மாணவனுக்கு ஆசிரியையால் நேர்ந்த கொடூரம்!

வீட்டுப்பாடம் செய்து வராத சிறுவனுக்கு ஆசிரியை கொடுத்த கொடூர தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வீட்டுப்பாடம் சரியாக எழுதாத காரணத்தினால் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சூடு வைத்ததாக அந்த பள்ளியின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

 நேற்று கொடுத்த வீட்டுப்பாடத்தை சரியாக எழுதி வராததால் வகுப்பு ஆசிரியையும், அப்பள்ளியின் தாளாளரின் மகளுமான ரம்யா என்பவர் அந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தியால் சூடு வைத்துள்ளார். மாணவன் வீட்டுக்குச் சென்றதும் அழுதபடியே தனது பெற்றோரிடம் இதைப் பற்றி கூறியுள்ளான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

 பின்னர் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியை மீது புகார் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியை ரம்யாவை கைது செய்துள்ளனர். உண்மையில் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று தான் ஆசிரியை இப்படி நடந்து கொண்டாரா?

அல்லது மாணவனிடம் ஆசிரியை இப்படி கொடூரமாக நடந்து கொள்ள வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஆசிரியை மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.