பிரபல தொழில் அதிபர் நரபலி? தலைமறைவான திருநங்கை சாமியார்! சென்னை அருகே பயங்கரம்!

சென்னை தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் திருநங்கை சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்


சேலையூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சொகுசு காரை திறந்து பார்த்ததில் கீழக்கட்டளையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட விவகாரம் வெளியான சில நேரங்களிலேயே மாரிமுத்து மற்றும் சோமசுந்தரம் என்ற இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், பழனிச்சாமியை கொலை செய்ததாக சரணடைந்துள்ளனர். ஐந்து லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்காக பழனிச்சாமியிடம் வாங்கியதாகவும் இந்த கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பழனிச்சாமியை 5 லட்ச ரூபாய் பணவிவகாரத்தில் கொலை நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த வியாழனன்று சேலையூரில் உள்ள ஜெயசக்தி ஆன்மீக பீடம் இருக்கும் திருநங்கை சாமியார் ரஞ்சித்தை சந்திக்க செல்வதாகவும், அவரிடம் இருந்து கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக செல்வதாகவும் பழனிச்சாமி வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் பழனிச்சாமி வெள்ளிக்கிழமை சொகுசு காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

குறிப்பாக இந்த கொலையில் சரணடைந்த மாரிமுத்து பழனிச்சாமியிடம் டிரைவராக சில மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். சரணடைந்த மாரிமுத்து மற்றும் சோமசுந்தரம் இருவரும் திருநங்கை சாமியார் ரஞ்சித்தின் கூட்டாளிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட திருநங்கை சாமியார் ரஞ்சித்தை விசாரணை செய்ய போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

சாமியார் ரஞ்சித் நள்ளிரவு பூஜைகள் செய்தால் அதில் தொடர்ந்து கலந்து கொண்டால் தொழில் விருத்தியாகும் எனவும் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என பழனிச்சாமி ஆசை வார்த்தை கூறி மயக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை பல்வேறு கோயில்களுக்குச் சென்று ஆன்மீகப் பணியும் நன்கொடையும் வழங்கிய பழனிச்சாமி ,கடந்த இரண்டு ஆண்டுகளாக சாமியார் ரஞ்சித்துக்கு மட்டும் பல்வேறு நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

திருநங்கை சாமியார் ரஞ்சித்தின் ஆன்மீக வலையில் சிக்கி அவரை தன் தெய்வமாகவே பழனிச்சாமி பார்க்கத் தொடங்கி இருக்கிறார் என்பதும்  தெரிய வந்துள்ளது. ரஞ்சித் மடத்திலும் பல நள்ளிரவு பூஜை செய்ய துர் தேவதை சிலைகளும்,பலி கொடுக்க பல ஆடுகளும் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே பூஜை செய்வதற்காக தொழில் அதிபரை திருநங்கை சாமியாரான ரஞ்சித் கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே அவர் சிக்கினார் தான் இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.