துணைப் பிரதமர் பதவி! ஸ்டாலினுக்கு ஆசையை தூண்டிய கேசிஆர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது வியூகத்திற்கு ஒப்புக்கொண்டால் துணைப் பிரதமர் பதவியை பெற்றுக் கொடுப்பதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.


நான்கு நாட்கள் காத்திருப்புக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே ஸ்டாலினை சந்திக்க தேதி கேட்டிருந்தார் சந்திரசேகர ராவ். துவக்கத்தில் தேதியை கொடுத்த திமுக பிறகு ஸ்டாலின் பிஸி என்று கூறி சந்திரசேகரன் அவரைச் சந்திக்க மறுத்து விட்டது.

ஆனாலும் இடாத சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்து ஆகவேண்டும் என்று நேராக தமிழகம் வந்து விட்டார். முடிந்த அளவிற்கு திமுக தரப்பு சந்திரசேகர ராவ் ஸ்டாலின் சந்திப்பை தவிர்க்கவே பகீரத முயற்சி மேற்கொண்டது. ஆனால் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலையிட்டு சந்திரசேகர ராவ் ஸ்டாலின் சந்திப்பை சாத்தியமாக்கினார்.

இதற்காக தமிழகத்தில் 4 நாட்கள் காத்திருந்த சந்திரசேகர ராவ் நேற்று ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பு ஏன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது என்று ஒரு கேள்வி எழுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது தான் சந்திரசேகர ராவ் மற்றும் ஸ்டாலின் சந்திப்பின்போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் லீக் ஆகி வருகின்றன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிக இடங்களைப் பெறும் கட்சிகளாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தமிழகத்தில் திமுக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தான் முன்னிலையில் உள்ளன.

இந்தக் கட்சிகள் தலா 20 இடங்களுக்கு மேல் வெல்லும் பட்சத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க இவர்களின் ஆதரவு பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் சரி தேவைப்படும். இதனைச் சுட்டிக்காட்டி தான் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு அணியை முயற்சிப்பதாகவும் அதற்கு சாத்தியமில்லை என்றும் சந்திரசேகர ராவ் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் அதிக இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிற நிதர்சனத்தை ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜகவை ஆதரிப்பதன் மூலம் மத்தியில் முக்கிய பொறுப்புகளுடன் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்றும் தீவிரமாக முயன்றால் துணைப் பிரதமர் பதவியை திமுகவிற்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சந்திரசேகர ராவ் கூறியதாக சொல்கிறார்கள்.

ஆனால் இதனை பெரிய அளவில் பொருட்படுத்தாத ஸ்டாலின் கண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறி சந்திரசேகராவை அனுப்பி வைத்துள்ளார்.