பெண்களின் மாதவிடாய், பீரியட் என்றால் என்ன? மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் கல்வித்துறை!

தெலுங்கானாவில், மாதவிடாய் கோளாறு தொடர்பாக, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.


தெலுங்கானா மாநிலத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் போன்ற பின்னணியை சேர்ந்த மாணவர்களுக்காக சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, வாய்ஸ் 4 கேர்ள்ஸ் என்ற என்ஜீஓ அமைப்பு, சிறப்புக் கல்வி முகாம் ஒன்றை நடத்தி வருகிறது. ஃபயர்ப்ளைஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கோடை கல்வி முகாமில், மாதவிடாய்க் கோளாறு, ஆண், பெண் உடலமைப்பு, இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வுப் பாடம் சொல்லித் தரப்படுகிறது. 

இதுபற்றி முகாமில் பங்கேற்ற மாணவர்கள் கூறும்போது, மாதவிடாய்க்கோளாறு உள்ளிட்ட விசயங்கள் முதலில் வேடிக்கையாக தெரிந்தாலும், இந்த முகாமில் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அதில் உள்ள வலி, வருத்தங்கள் புரிகிறது, என்றனர். இதேபோல, மாணவிகளும், வீட்டில் பெற்றோரிடம் கேட்க முடியாததைக் கூட இங்கே தெளிவாகக் கேட்டு சந்தேகத்தை நீக்கிக் கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டனர். 

இந்த நவீன 2019ம் ஆண்டிலும் கூட மாதவிடாய்க் கோளாறு உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான இந்திய பள்ளிகளில் பாடம் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால், ஆண்களை விட பெண்களே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதன் அடிப்படையில்தான், இத்தகைய கல்வி முகாம்களை நாடு முழுவதும் நடத்தி, மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, வாய்ஸ் 4 கேர்ள்ஸ் அமைப்பினர் குறிப்பிடுகின்றனர்.