சூப்பர் லாபத்தில் டாடா ஸ்டீல்! பங்குகள் விலை ஜிவ்வ்வ்!

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டின் லாபம் 6% உயர்ந்து ரூ.3,302 கோடி ஈட்டியுள்ளது.


மேலும் ஒற்றை சாளர வரி மூலம் 4,365 கோடி ஆதாயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை எஃகு உற்பத்தி நிறுவனமாக உள்ளது டாடா ஸ்டீல் இந்தியா.

நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டின் லாபம் எதிர்பார்த்ததை விட உயர்ந்துள்ளதாகவும், எஃகு விலைகள் வீழ்ச்சியடைந்து செலவினங்கள் அதிகரித்துள்ளதால், வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று.

செப்டெம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டின் இறுதியில் இதன் வருவாய் 15.45% குறைந்து ரூ .34,579 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ .40,897 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் ஒற்றைச் சாளர வரி சலுகை மூலம் சுமார் 2,400 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும், கடந்த அக்டோபர் மாதம் நெதர்லாந்தில் உள்ள எஃகு ஆலைகளிலிருந்து சுமார் 2500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக. திட்டமிட்டபடி வேலை நடைபெறாததால் ஐரோப்பாவில் உள்ள டாடா ஸ்டீலின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்கள் பணி நீக்கம் காரணமாக சுமார் 930 மில்லியன் டாலரை சேமிக்க உத்தேசித்துள்ளதாக அறியப்படுகிறது. இரண்டாவது காலாண்டில் 6.95 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது இந்த நிறுவனம், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை டாடா ஸ்டீல் நிறுவனத்தையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டாடா குழுமம் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், ஒடிசாவிலுள்ள தனது கலிங்காநகர் ஆலையில் முதலீடுகளை அதிகரித்துள்ளதாகவும். கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 2019-2020 நிதியாண்டிற்கான மூலதன செலவு 12,000 கோடி ரூபாயிலிருந்து, 8,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில் இதன் பங்குகள் 404.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.