பிரதமர் மோடிக்கு பச்சை தமிழகத்தின் நறுக் சுருக் கேள்விகள். வாயால் வடை சுடுகிறாரா மோடி?

பிரதமர் மோடியின் ‘வைரஸ் உரை’ வழக்கம்போல வாயால் வடை சுடும் வித்தையைத்தான் காட்சிப்படுத்துகிறது.


இந்தியாவில் கோவிட்-19 நோயின் பாதிப்புக்கள் குறித்த எந்தவிதமான புள்ளிவிபரங்களோ, தரவுகளோ, அரசின் தேர்ந்த நடவடிக்கைகளின் பட்டியலோ எதுவுமின்றி, ‘செய், செய்யாதே’ எனும் பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் என்று குற்றம் சாட்டியிருக்கிறது பச்சை தமிழகம் கட்சி. 

முதன்முறையாக நாட்டின் பொருளாதாரம் பாழ்பட்டு கிடக்கிறது எனும் அனைத்து இந்தியர்களும் ஆண்டுகளாக அறிந்து வைத்திருக்கும் உண்மையை பிரதமர் ஒருவழியாக ஒத்துக்கொண்டிருக்கிறார். ‘கரோனா வைரஸ் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளதாம். குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இவை எல்லாமே கடந்த ஒரு வாரத்தில்தான் நடந்தேறியதாக பிரதமர் நம்மை நம்பச் சொல்கிறார்.

கொரோனா வைரசின் முதுகிலேறியாவது இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பது நல்ல விடயம்தான். ஆனால் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உருவாக்கப்படும் செயல்பாட்டுக்குழுவுக்கு, படுதோல்வி அடைந்து, நிருபர்களின் நியாயமான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க மறுக்கும், செயல்படாத நிர்மலா சீத்தாராமனையே தலைவராக நியமிக்கிறார் பிரதமர்.

1) ஏழ்மை, வறுமை, வேலையின்மை, ஊழியர் நலம் பற்றியெல்லாம் நீங்கள் பேசத் துவங்குவது நல்ல விடயம்தான். இது உண்மையான கரிசனமென்றால், இந்திய மக்களைப் பிளவுபடுத்தும், ஏராளமான தேவையற்றப் பிரச்சினைகளை உருவாக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம், என்.ஆர்.சி. என்.பி.ஆர். போன்ற மக்கள் விரோத விடயங்களை உடனடியாகக் கைவிடுங்கள்!

2) அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ, பணிவோ, பக்குவமோ ஏதுமற்ற நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நீக்கிவிட்டு, பொருளாதாரம் அறிந்த, தலைக்கனம் இல்லாத, தலைமைத்துவம் மிக்க ஒருவரை நிதியமைச்சராக நியமியுங்கள்.

3) அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கும், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் கடன்காரர்களுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற உலக ஆயுத வியாபாரிகளுக்கும் உதவிகள் செய்து, அவர்கள் நலன்களுக்காக ஓடியோடி உழைப்பதை நிறுத்திவிட்டு, ஏதுமற்ற ஏழை இந்தியர்களுக்காக இனியாவது வேலைசெய்யத் துவங்குங்கள்.

4) உங்கள் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் வரவு-செலவு, லாப-நட்டம், சாதக-பாதகம் போன்றவை குறித்து இந்திய மக்களிடம் விளக்கிச் சொல்லி, அந்தத் திட்டம் இப்போது எப்படி உதவுகிறது, அல்லது உதவவில்லை என்கிற விபரங்களைத் தெரிவியுங்கள். கரோனா வைரஸ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் உடல் நலம், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு குறித்த உங்கள் அரசின் திட்டங்களை அறிவியுங்கள்.

5) கரோனா வைரஸால் மிக அதிகமான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் ஏழை பாழைகளுக்காகத் திட்டமிடுங்கள். நீங்களே சக்கரம் ஒன்றை மீண்டும் கண்டுபிடிக்க முனைவதற்கு பதிலாக, கேரள முதல்வர் அமுல்படுத்தும் அருமையான திட்டங்களை நாடு தழுவிய அளவில் அமுல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.