சீன அதிபரை வரவேற்க தமிழகம் ரெடி! மீனவர்களுக்கும் லீவு விட்டாச்சு!

சுத்தமான மாமல்லபுரத்தை இப்போதுதான் பார்க்க முடிகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை அடுத்து வரவேற்பு ஏற்பாடுகள் ஜெகஜோராக நடந்து வருகிறது.


இந்திய பிரதமர் மோடியை, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசும் அதிகாரப் பூர்வ சந்திப்பு இந்த மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இரு தரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள், இந்தியா - சீனா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்த கருத்துகளை பரிமாறி கொள்வதற்கான வாய்ப்புகளை மோடிக்கும், ஜின்பிங்கிற்கும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் சீன தொழிற்சாலை, சீன வங்கி சென்னையில் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. 

மேலும், ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பயந்து யாரும் கடைகளை மூடிவிட்டுப் போய்விடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.