தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு தகவல் தொழில் நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்துவந்தார்.


தமிழகத்தின் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இணைய வசதி அளிப்பதற்காக 2441 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டத்திலும் முக்கிய பங்குவகித்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுபெறுவதாக தலைமைச் செயலாளருக்கு திடீரென கடிதம் எழுதினார். மீண்டும் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். வந்தாச்சு..! எப்படி சாதித்தார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை விவகாரத்தில் ஆட்சியாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். தன்னுடைய பதவியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றுக் கிளம்ப முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சந்தோஷ் பாபுக்கு புதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளராக இருந்துவந்த சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்டர் விவகாரத்தில் தாங்கள் சொல்லும் நபருக்குத்தான் டென்டரைக் கொடுக்கவேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த நடவடிக்கை மேற்கொண்டால், தனக்குச் சிக்கல் வரும் என்பதை உணர்ந்துகொண்ட சந்தோஷ் பாபு அதற்கு இணங்கவில்லை. அதனாலே முன்க்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு விண்ணப்பம் செய்தார்.

சந்தோஷ் பாபு இப்படியொரு காரியத்தை செய்வார் என்று தமிழக அரசு எதிர்பாக்கவில்லை. மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின்கூட, இந்த விவகாரத்தைப் பற்றி ட்வீட் போட்டு தெறிக்கவிட்டார். அதனால், வேறு வழியின்றி அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அதன்பிறகே அவரது விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திடீரென இடமாற்றம் மட்டும் செய்துள்ளனர். ஆனால், இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து இதுவரை சந்தோஷ் பாபு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்.