அதிமுக ஆட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதி,மத ஆணவக் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேபோகிறது; ஆட்சியாளர்கள் அதை வெளிப்படையாக ஊக்குவிப்பதே அதற்குக் காரணமெனவும் தெரியவருகிறது என்று வி.சிகட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாதி,மத ஆணவக் குற்றங்களை தமிழக அரசு ஊக்குவிக்கிறது - திருமாவளவன் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாதிமறுப்பு திருமணம் ஒன்று விவகாரமானதைத் தொடர்ந்து, அதில் அமைச்சர் ஒருவரின் குறுக்கீடு இருப்பதாகவும் அவரை பதவிநோக்கம் செய்யவேண்டும் என்றும் சில நாள்களுக்கு முன்னர் திருமாவளவன் கூறியிருந்தார். அதையடுத்து, ஆளும் அதிமுக அரசின் மீதே அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இது குறித்து இன்று மாலை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ” சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த " செல்வன் – இளமதி " தம்பதியினரை வன்முறையின் மூலம் பிரித்தது மட்டுமின்றி, அதற்காக நீதி நியாயத்துக்காகப் போராடிய கொளத்தூர் மணி உள்பட்டோர் மீது காவல்துறை பொய்வழக்குப் பதிவுசெய்துள்ளது.
அதற்கு அதிமுக அமைச்சர் ஒருவர் தூண்டுதலாக இருந்துள்ளார் என்று தெரியவருகிறது. அவர் யாரென்று வெளிப்படையாக அரசுக்கு அடையாளப்படுத்த வேண்டியதில்லை. காவல்துறையினரின் மூலம் அச்சுறுத்தி அத்தம்பதிகளைப் பிரித்த அமைச்சர் யாரென அடையாளம் கண்டு அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அத்துடன், ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி என்பவரும் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் என்பவரும் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் காதல் ஏற்பட்டு அது இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
. இந்நிலையில் அவர்கள் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் அந்த திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளனர். திருமணம் நடந்த அன்றைய இரவு 100க்கும் மேற்பட்ட பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சார்ந்தவர்கள் மணமக்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து அவர்களை மட்டுமின்றி திருமணம் நடத்தி வைத்த தோழர்களையும் கொடூரமாகத் தாக்கி மணமக்களை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் இளமதியை மட்டும் தனியே பிரித்து வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். திருமணமண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மணமகன் செல்வம் மற்றும் திவிக தோழர்கள் மட்டும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒருவார காலமாக இளமதியை ஒளித்து வைத்திருந்த சாதி வெறியர்கள் நேற்று அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கடுமையாக மிரட்டப்பட்டிருந்த நிலையில் இளமதி பெற்றோருடன் செல்வதாகக் கூறியுள்ளாரெனத் தெரிகிறது. இளமதியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக அவரை மற்றவர்களின் பொறுப்பில் அனுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சாதி மறுப்புத் திருமணத்துக்கு ஆதரவாக இருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட்டோர் மீது இளமதியைக் கடத்தியதாகப் பொய்வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இவை எல்லாமே அதிமுக அமைச்சர் ஒருவரின் தூண்டுதலினால்தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமான ஆணவக் குற்றத்துக்குத் துணைபோகும் அமைச்சரை அப்பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும்.
அண்மையில் கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான த.பெ.தி.கவினர் 10 பேரை ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போலிஸ் பொய் வழக்கு புனைந்து கைது செய்ததுடன், அவர்களைக் குண்டர்தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தியுள்ளது.
இப்போது கொளத்தூர் மணி மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. தமது இந்துத்துவ எஜமானர்களை திருப்திபடுத்தவே பெரியாரியக்கத் தொண்டர்கள்மீது தமிழக அரசு பொய் வழக்குகள் போட்டு ஒடுக்குமுறையை ஏவுவதாகத் தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சாதிமத ஆணவக் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. ஆட்சியாளர்கள் அதை வெளிப்படையாக ஊக்குவிப்பதே அதற்குக் காரணமெனவும் தெரியவருகிறது.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார்.
27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “ கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்;
இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின்பற்றவில்லை. இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். இந்நிலையில், தோழர் கொளத்தூர்மணி உள்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை இரத்துசெய்யவேண்டும்; ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும்.” என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.