பெண்களை போலீஸ் அடிக்கலாமா..? பொங்கி எழுகிறது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் பேராசிரியர் அருணனும், க.உதயகுமாரும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி நேற்று வண்ணாரப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் நடத்திய பெண்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த ஆண்கள் மீதும் தமிழக போலீஸார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி கலைக்க முயற்சித்துள்ளனர்.

இதில் பலபேர் மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அமைதியான முறையில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் வன்முறை நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஒரு அமைதியான போராட்டத்தினை தமிழக போலீசார் தடியடி தாக்குதல் நடத்தி கலைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தமிழக காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், தமிழக அரசு அத்துமீறி தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் கடந்த மூன்று மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு கோடிக்கணக்கான மக்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் மத்திய பிஜேபி அரசின் எடுபிடியாக தமிழக அரசு செயல்பட்டு வருவது மேலும் மேலும் தங்களை அன்னியப்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

உடனடியாக தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது.