திடீரென திசை மாறும் பீகார் தேர்தல்..! வெற்றி வாய்ப்பு யாருக்கு..?

பிகார் மாநிலத்தில் சட்டமன்றத். தேர்தல் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என மூன்று கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை துவங்குகிறது. முதல் கட்டத் தேர்தலில் 71 இடங்களுக்கு தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும்.


இந்த நிலையில், பீகார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதற்கேற்ப எதிர்க் கட்சிகள் நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறிக் கிடந்தன. ஆனால், எல்லாமே தேர்தலுக்காக ஒற்றுமை ஆகியுள்ளனர்.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வர் வேட்பாளருமான நிதீஷ் குமாருடன் தங்களுக்கு சித்தாந்த மோதல் இருப்பதால் அந்தக் கூட்டணிக்குள் இருக்க முடியவில்லையென எல்.ஜே.பி. தெரிவித்திருக்கிறது. அதனால், அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அதேநேரம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் இழுபறியில்லாமல் முடிந்து போயிருக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகள் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களும் மற்ற கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆக, போட்டி கடுமையாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.