இன்று அரசியல் அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும், மக்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அலுவலர்களுக்கும் மக்களுக்கும் இடையில் கமிஷன் வாங்கித் தரும் புரோக்கர்களாக பலரும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை கொக்கு என்று வர்ணித்து, சுற்றுச்சூழல் போராளி சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள பதிவு இது.
அரசு அலுவலகங்களில் இருக்கும் வெள்ளைக்கொக்குகளை விரட்டுவது யார்..? கேள்வி எழுப்பும் சுப உதயகுமாரன்.
தமிழகத்தில் தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை எங்கே சென்றாலும், ஒரு 'கொக்குக் கூட்டம்' குழுமிக் கிடக்கிறது. இவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருகிறவர்களைக் கவ்விப்பிடித்து, உரிய அலுவலர்களிடம் அழைத்துச்சென்று, அவர்களின் வேலைகளை முடித்துக் கொடுக்கிறார்கள்.
அரசு அலுவலர்கள் இந்த ஏற்பாட்டைப் பெரிதும் விரும்புகிறார்கள், காரணம் அவர்கள் யாரிடமும் எந்த லஞ்சமும் கேட்க வேண்டியதில்லை, பேரம் பேச வேண்டியதில்லை. அவர்களுக்கு வேண்டியதை இந்த கொக்குகள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.
அரசு அலுவலகங்களில் பழியோ பழி என்று காத்துக்கிடக்கும் இந்தக் கொக்குகளுக்கும் அன்றாடச் சம்பளம் கிடைத்துவிடுகிறது. இந்த கொக்குகளைத் தாண்டி யாரும், எந்த அலுவலகத்திலும், எந்த வேலையையும் எளிதில் செய்துவிட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.
இந்த கொக்குகள் சில இடங்களில் அதிகாரபூர்வ அங்கீகாரத்துடன் வலம் வருகிறார்கள். சிறந்த எடுத்துக்காட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்களின் அருகே மண்டிக்கிடக்கும் எழுத்தர்கள். ஒரு பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று ஒரு திருமணத்தைப் பதிவுசெய்ய முயன்று பாருங்கள். அதற்குரிய அரசு விண்ணப்பத்தைக்கூட அலுவலகத்தில் தர மாட்டார்கள். அருகேயுள்ள ஓர் எழுத்தர் அலுவலகத்துக்கு உங்களை அனுப்பிவிடுவார்கள்.
அந்த "கொக்கு" எல்லா வேலைகளையும் செய்து, அவற்றுக்கான செலவுகள், அவருக்குரியக் கட்டணம், பதிவாளர் முதல் பியூன் வரையிலுமான அனைத்து அலுவலர்களுக்கான லஞ்சம் என ஒரு தொகையை உங்களிடம் கறந்துவிடுவார்.
RTO அலுவலகங்களில் இந்த கொக்குகளை 'புரோக்கர்கள்' என்றே அழைக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் நீங்கள் அந்த அலுவலகத்தில் எந்த வேலையையும் செய்துமுடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. கிட்டத்தட்ட 90 விழுக்காடு அரசு அலுவலகங்களில் இந்த கொக்குகளின் அராஜகம்தான் நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் முதல் கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான் இது.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு "அனுபவித்து"க் கொண்டிருக்கும் ஐயாக்களோ, அம்மாக்களோ யாராவது இதை சீர்திருத்த முனைந்தார்களா? கிடையாது! தொடங்கிவைத்ததே அவர்கள்தானே. பல்வேறு உளவுத்துறைகளில் ஒன்றாவது இந்த 'கொக்கு அரசாங்கம்' நடத்தும் மக்கள் விரோத தர்பாரை கண்காணிக்கிறதா? இல்லை! அவர்கள்தான் என் போன்ற ஆபத்தானத் தேசத்துரோகிகளை அவதானித்துக் கொண்டிருக்கிறார்களே?
லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினராவது இந்த கொக்குக் கலாச்சாரத்துக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கிறார்களா? இல்லவே இல்லை. அவர்கள் பழம் நழுவி பாலில் விழுந்து, அங்கேயிருந்து நழுவி வாயில் விழுந்தால் மெல்ல விழுங்குவார்கள், அவ்வளவுதான்.
'முதலைகள்' ஆட்சி நடத்துகின்றன; 'திமிங்கலங்கள்' வணிகம் செய்கின்றன; 'கொக்குகள்' மற்றும் 'குருவிகள்' அரசுத் துறைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த அமைப்பில் மனிதனுக்கு கிடைப்பது கொரோனா போன்ற வைரஸ்கள் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.