டெல்லி: பிரதமர் மோடியை சந்தித்தபோது அவமானம் நேரிட்டதாக, எஸ்பிபி தெரிவித்துள்ளார்.
மோடி வீட்டில் எனக்கு நிகழ்ந்த அவமானம்..! பிரபல பாடகர் எஸ்பிபி வெளியிட்ட ஷாக் தகவல்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான சினிமா பாடல்களை பாடி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் சமீபத்தில் பிரதமர் மோடி சார்பாக சினிமா நட்சத்திரங்களுக்காக நடைபெற்ற விருந்து ஒன்றில் பங்கேற்றார். அதன்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பற்றி ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார்.
அதில், ''பிரதமர் மோடியின் வீட்டில் கடந்த அக்டோபர் 29ம் தேதி நடந்த விருந்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்த ராமோஜி ராவுக்கு நன்றி. ஆனால், பிரதமரின் வீட்டில் நுழைந்தபோது, பாதுகாவலர்கள் என்னைப் போன்ற பலரது ஸ்மார்ட்ஃபோனை பறிமுதல் செய்துவிட்டனர். அதேசமயம், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் ஸ்மார்ட்ஃபோனை கையில் எடுத்துச் சென்றதோடு, பிரதமருடன் வித விதமான செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அதனை பாதுகாவலர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய விசயங்களை பொறுத்துக் கொள்ள முடியுமோ??,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, காந்தி சிந்தனைகளை பரப்பும் வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரையும் மோடி அழைத்து, விருந்து வைத்தார். இதன்போது எடுத்த புகைப்படங்களை ஷாரூக் கான், அமீர் கான் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். அதை சுட்டிக்காட்டியே எஸ்பிபி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.