ரூ.23 ஆயிரம் கோடி நஷ்டம்..! பங்குச்சந்தைகளிலும் செம அடி..! சிக்கலில் ஏர்டெல்!

டெல்லி: செப்டம்பர் காலாண்டில் ரூ.23,045 கோடி நஷ்டத்தில் உள்ளதாக, ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.


தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் இருந்து வந்த ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் வருகைக்குப் பின், படிப்படியாக வர்த்தக இழப்பை சந்திக்க தொடங்கியது. கிடுகிடுவென சில மாதங்களிலேயே ஏர்டெல்லின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதற்கு, ஜியோவின் போட்டி முக்கிய காரணமாக, ஏர்டெல் தரப்பிலேயே ஒத்துக் கொள்ளப்பட்டது.  

இந்நிலையில் 2019-20 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனம் லாபம் ஏதுமின்றி ரூ.23,044 கோடி நஷ்டத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.118.8 கோடி நிகர லாபத்துடன் இருந்தது இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.

அதேசமயம், வரி, வட்டி, செலவினங்களுக்கு முந்தைய வருமானம் (ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபம்) 40.9 சதவீத உயர்வுடன் ரூ.8,936 கோடியாக உள்ளதென்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதுபோலவே, செயல்பாடுகள் மூலமான வருமானம் ரூ.21,131 கோடியாக உள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 80 லட்சம் 4ஜி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக, ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.  

காலாண்டு நிதிநிலை முடிவுகள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் மும்பை பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.