பெரம்பலூர் செக்ஸ் விவகாரம்! சீமான் கட்சி வழக்கறிஞர் திடீர் கைது!

பெரம்பலூரில் ஆளும் கட்சி பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


பெரம்பலூரில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் அரசுப் பணி வாங்கித் தருவதாக  பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் அருள் என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதுமட்டும் இல்லாமல் சென்னையில் செய்தியாளர்களையும் அருள் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார்.

ஆனால் கடைசி வரை செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர் பெயரை அருள் வெளியிடவில்லை. மேலும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய தன்னை கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தங்கள் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் அருள் புகார் அளித்துள்ளதாக அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கறிஞர் அருள் காவல்துறையினரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார்.