10 மீனவர்களை காப்பாத்துங்க… அபயக்குரல் எழுப்பும் ஆர்ப்பாட்டம்.

கடலுக்குப் போய் 48 நாட்களாகியும் 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனம் காட்டுவது குறித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது, தமிழ் மக்கள் உரிமைக் கூட்டியக்கம்..


சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23 அன்று கடலுக்குப் போன 10 மீனவர்கள் இன்றுவரை கரை திரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் உதவி இயக்குநர் அலுவலகம் நோக்கி அவர்தம் உறவுகள் நடந்தவண்ணம் உள்ளனர். வெறும் 10 நாட்களுக்கான உணவு, குடிதண்ணீரோடு கடலுக்குப் போயுள்ளவர்களை உயிருடன் மீட்க வேண்டுமாயின் போர்க்கால அடிப்படையில் தேட வேண்டும். கடற்படை, செயற்கைகோள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

தூதரக உறவுகளைப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதை அரசுக்கு சுட்டிக்காட்டி, அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் காசிமேட்டில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மீனவ சங்க நிர்வாகிகள், கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள்,தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இனியாவது அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு 10 மீனவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் இறங்கவேண்டும்.