ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலையில் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு நேரடி சம்பந்தம் உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருதி தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜெயிலுக்குச் செல்லும் சூழல் உருவானது.
அண்ணாச்சி ராஜகோபால் திடீர் மரணம்! மாபெரும் சாதனையாளருக்கு இப்படியா மரணம் வரவேண்டும்?
மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ராஜகோபாலை, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. இருப்பினும் அவர் உடல்நிலை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி உத்திரவிட்டதனால் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு மருத்துவ வசதிகள் போதவில்லை என்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆயுள்தண்டனை பெற்ற கைதி சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இப்படி சொந்த செலவில் சொகுசான மருத்துவமனையில் காலத்தை ஓட்டலாமா என்ற கேள்வியை பலரும் எழுப்பிவந்த நேரத்தில், இன்று அண்ணாச்சி மரணம் அடைந்திருக்கிறார்.
தமிழகத்தில் பிராமணர்கள் கையில் இருந்து ஹோட்டல் தொழிலை, தன்னுடைய கைக்கு மாற்றியவர் ராஜகோபால். முதன்முறையாக ஹோட்டலில் பணியாற்றுபவர்களை மக்கள் மரியாதையுடன் பார்க்கத் தொடங்கினார்கள் என்றால், அது இவருடைய வருகைக்குப் பிறகுதான். ஏனென்றால், தன்னுடைய ஹோட்டல் வருமானத்தில் ஊழியர்களுக்கும் பங்கு கொடுத்தார்.
ஒரு சாதாரண பெட்டிக் கடை ஊழியராக இருந்து இன்று மாபெரும் பிசினஸ் சாம்ராஜ்யம் அமைத்திருக்கும் ராஜகோபாலுக்கு இப்படியொரு மரணம் வாய்த்திருக்கத் தேவையில்லை. இவர் தமிழ்நாட்டில் தவிர வேறு எங்காவது பிறந்து, இத்தகைய வெற்றி பெற்றிருந்தால், கொண்டாடப்பட்டிருப்பார் என்பது மட்டும் நிஜம்.