கொரோனாவை ஒழித்த கேரளத்தில் தற்போது வரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை! ஆனால் தமிழகத்தில்..? ராமதாஸ் அட்டாக்!

கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளம் மதுக்கடைகளைத் திறக்கத் தடை போடும்போது தமிழகம் அவசரம் காட்டுவது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் நிலையில், தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. 

கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும்போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.