உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களை புறக்கணிக்கலாமா? ராமதாஸ் ஆவேசம்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாய வழக்கறிஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தகுதியும், திறமையும் இருந்தும் கூட தொடர்ச்சியாக வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; இது மிகப்பெரிய சமூக அநீதி என்று கருத்து தெரிவித்துள்ளார் ராமதாஸ்.


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள 12 பணியிடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களைக் கொண்டும், 3 இடங்கள் மாவட்ட நீதிபதிகளைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். வழக்கறிஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய 9 நீதிபதிகள் பணியிடங்களில் 5 பணியிடங்களுக்கு வழக்கறிஞர்களின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அந்த ஐவரில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும். இப்போது மட்டுமல்ல... கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி 10 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்களிலும் ஒரு நீதிபதி கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.

உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள், இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் ஆகிய 15 நீதிபதிகள் பணியிடங்களில் குறைந்து 3 இடங்களாவது வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்தில் தான் கடைசியாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின், இப்போது பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளையும் சேர்த்து மொத்தம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை. இந்த அநீதியை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.

75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் மட்டுமே நீதிபதிகளாக உள்ளனர். அவர்களில் இருவர் அடுத்த சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், வன்னியர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

வன்னியர்கள் மட்டுமின்றி, மேலும் பல சமுதாயங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் நியாயமல்ல. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு பல்வேறு சமுதாயங்களைக் கொண்ட நாடு என்பதும் உண்மை.

தகுதியின் அடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது தான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களுக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பும் போது அதில் வன்னியர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட பிற சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.